
வரலாற்று சிறப்புமிக்க விவசாயிகள் போராட்ட வெற்றியை முன்னுதாரணமாக கொண்டு பாஜக அரசை வீழ்த்த வேண்டும்" என்று திருவாரூரில் நடந்த விவசாயிகள் பாராட்டு கூட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் அசோக் தாவ்லே பேசினார்.
மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஏறக்குறை ஒரு வருடமாக தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி, அதனை திரும்ப பெற வைத்த விவசாயிகளுக்கு பாராட்டு பொதுக்கூட்டம் நேற்று மாலை 6 மணிக்கு திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக திருவாரூர் ரயில் நிலையத்தில் இருந்து பேரணியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பழைய பேருந்து நிலையம், நேதாஜி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக தெற்கு வீதியில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு ஊர்வலமாக வந்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பின் ஐவர் பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றிருந்த அசோக் தாவ்லே பேசுகையில், "பி.ஜே.பி. அரசு நாட்டில் உள்ள அனைத்து துறைகளையும்; வருவாய் அளிக்கக் கூடிய அரசு நிறுவனங்களையும் விற்று வருகிறது. நாட்டை விற்பனை செய்து வரும் பாஜக அரசை எதிர்த்து போராடி வருகிறோம். தொடர்ந்து நசுக்கப்பட்டு வரும் உழைக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் காப்பாற்றப்பட வேண்டும். இந்த வரலாற்று சிறப்புமிக்க விவசாயிகள் போராட்ட வெற்றியை முன்னுதாரணமாக கொண்டு பாஜக அரசை வீழ்த்த வேண்டும்" என்று பேசினார்.