Skip to main content

"சிறார்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய வேண்டும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்! 

Published on 05/06/2022 | Edited on 05/06/2022

 

"We must ensure the safety of minors" - Chief Minister MK Stalin's request!

 

ஆறு, குளங்களில் குளிக்க செல்லும் சிறார்கள், இளைஞர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 

இது தொடர்பாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (05/06/2022) வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று (05/06/2022) கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணம் கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையில் 7 சிறுமியர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நாம் அனைவருக்கும் மிகுந்த வேதனையை அளித்தது. ஆறு, ஏரி மற்றும் குளங்கள் போன்ற நீர்நிலைகளில் குளிக்கச் செல்லும், சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று சம்பந்தப்பட்ட குடும்பங்கள் வாழ்நாள் முழுவதும் தீரா துயரில் ஆழ்ந்துவிடும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது. 

 

அது மட்டுமின்றி, இத்தகைய உயிரிழப்புகள் நம் சமுதாயத்திற்கும் ஒரு பேரிழப்பாக அமைந்து விடுகிறது. எனவே, இதில் நாம் அனைவரும் தீவிர அக்கறையும், கவனமும் செலுத்தி, இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாத வண்ணம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். 

 

குறிப்பாக, கிராமப்புற பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர்கள் குளிக்கச் செல்லும் போது, பெற்றோர்கள் (அல்லது) பெற்றோர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் பாதுகாப்பான முறையில் நீர்நிலைகளைப் பயன்படுத்துவதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

 

'வந்தபின் தவிப்பதை விட வருமுன் காப்பது மேல்' என்பதை நாம் அறிவோம். இது போன்ற துயர நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுப்பதற்கு சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பங்குண்டு. குறிப்பாக, ஆறுகள், குளங்கள் உள்ள நீர்நிலைப் பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெரியவர்கள், இளைஞர்கள், உள்ளாட்சி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், காவல்துறையினர், அனைவரும் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குறிப்பாக, சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர்களுக்கு நீர்நிலைகளில் ஏற்படக் கூடிய ஆபத்துகளை எடுத்துச் சொல்வதோடு, அவ்வாறு யாரேனும் பாதிக்கப்பட்டால், உடனடியாக முதலுதவி அளிப்பது குறித்த பயிற்சிகளும் வழங்கி, பொதுமக்கள் நீர்நிலைகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து விளக்கிச் சொல்ல வேண்டும் என்றும் இந்த தருணத்தில் அன்போடும், அக்கறையோடும் கேட்டுக் கொள்கிறேன். 

 

ஆழமான ஆற்றுப்பகுதிகள் மற்றும் குளங்களுக்கு அருகே தேவையான எச்சரிக்கை பலகைகளையும், தடுப்புகளையும் வைக்கப்படுவதை உள்ளாட்சி அமைப்புகளும், பொதுப்பணித்துறையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன். 

 

வாழவேண்டிய இளந்தளிர்கள் இவ்வாறு இழக்கப்படுவது இனியாவது தடுக்கப்படும் வகையில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என உறுதி ஏற்குமாறும் உங்கள் ஒவ்வொரு வரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.  

 

சார்ந்த செய்திகள்