"மக்களுக்கு என்ன வாக்குறுதி தரவேண்டும், அதனை மக்களுக்கு எப்போது நிறைவேற்றித் தரவேண்டும் என்பதை அதிமுக அரசுக்கு தெரியும், அதை சரியாக செய்யும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் எங்களுக்கு சொல்லி தரதேவையில்லை," என்கிறார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும், வலங்கைமான் பகுதியில் சட்ட மன்ற தொகுதி வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடத்தினார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட முகவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கியவர் வழக்கம் போல செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது பேசுகையில், "தமிழகத்தின் தேவைகளை, மக்களின் எண்ணங்களை ஜெயலலிதாவின் வழியில் நிறைவேற்றிவருகிறோம். அதிமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ஆராஜகம் இல்லாத கட்சி என்பதால் மக்கள் அதிமுகவை ஏற்று கொண்டுள்ளனர். மக்களுக்காக உழைக்கின்ற எடப்பாடி அரசே வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற செய்ய வேண்டும் என முடிவெடுத்து மக்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். மக்களின் விருப்பத்திற்காக வாக்கு சாவடி முகவர்கள் வருகின்ற 12, 13ம் தேதி வாக்காளர்களை சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம்.
வருகின்ற தேர்தல் அதிமுகவிற்கு வெற்றியை தரும் தேர்தல் களமாகதான் இருக்கும். மக்களுக்கு என்ன வாக்குறுதி தரவேண்டும், மக்களுக்கு அதனை எப்போது நிறைவேற்றி தரவேண்டும் என்பதை அதிமுக அரசு சரியாக செய்யும், செய்துவருகிறது. மக்கள் நீதி கட்சி தலைவர் எங்களுக்கு சொல்லி தர தேவையில்லை " என்றார்.