கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் மக்கள் வாழ்வாதாரத்திற்கு தேவையான நிவாரணப் பொருள்களை தமிழகத்தில் உள்ள பிற மாவட்டக் கழகச் செயலாளர்கள் - கழக சட்டமன்ற உறுப்பினர்கள் - கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள் அனைவரும் திருச்சி மாவட்டக் கழக அலுவலகமான “திருச்சி-கலைஞர் அறிவாலயம்” முகவரிக்குஉடனடியாக அனுப்பி வைத்திட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை:

’’கஜா புயல் மற்றும் கன மழையால் தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட எட்டு மாவட்ட மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. பல லட்சக்கணக்கான மரங்களும், பல்லாயிரக் கணக்கான மின் கம்பங்களும் விழுந்து விட்டன. வீடுகளும், கட்டிடங்களும் கடுமையான சேதங்களுக்கு உட்பட்டு, விவசாயிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு அம்மாவட்ட மக்கள் அனைவரும் வரலாறு காணாத வகையில் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தங்களுக்கு எதிர்காலம் என்ற ஒன்று உண்டா என்று ஏங்கித் தவிக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் விரைந்து செய்திருக்க வேண்டிய அதிமுக அரசு, கஜா புயலுக்குப் பிறகு நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு - கட்டமைப்பு நடவடிக்கைகளில் முற்றிலும் தோல்வியடைந்து, கிராமங்கள் தோறும் இருளில் மூழ்கிக் கிடக்கும் அவல நிலை இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. “தானே” “ஒகி” “வர்தா” உள்ளிட்ட பல்வேறு புயல்களால் மக்கள் தாக்குதலுக்குள்ளாகியும் இதுவரை அந்தப் பேரிடர்களில் இருந்து எவ்வித பாடத்தையும் அதிமுக அரசு கற்றுக் கொள்ளவில்லை என்பது கண்டனத்திற்குரியது. கஜா புயலுக்குப் பிறகு, மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் விளக்கேற்ற மண்ணெண்ணை கூட இல்லாமல் மக்கள் இருட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் ஆங்காங்கே கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள் களப்பணியில் இறங்கி தங்களால் இயன்ற நிவாரண உதவிகளைச் செய்து வருகிறார்கள் என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. ஆனாலும் இது போன்ற பேரிடர் நேரங்களில் இன்னும் முழு வீச்சில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளும் - உடன் பிறப்புகளும் ஈடுபட வேண்டியது நம் கடமையாகிறது.
ஆகவே கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உணவு, உடை, மருந்து, போர்வைகள், குடிநீர் பாட்டில்கள், மண்ணெண்ணெய், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப் பொருள்களை தமிழகத்தில் உள்ள பிற மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் அனைவரும் “திருச்சி - கலைஞர் அறிவாலயம்” முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அங்கிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய வகையில் நிவாரணப் பொருட்கள் பிரித்து அனுப்பப்படும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இது மிக அவசரமாகவும் அவசியமாகவும் அக்கறையுடன் ஆற்றிட வேண்டிய பணி என்பதை நினைவூட்டுகிறேன்!’’