எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 16 மீனவர்களும் நெடுந்தீவு அருகே 2 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மீனவர்களின் இரண்டு படகுகளையும் கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், மீனவர்களை காங்கேசந்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாகவும் தகவல் பரவியது. கைதானவர்களில் 12 பேர் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 4 பேர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. படகின் உரிமையாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்கள் படகில் 12 பேர் சென்றுள்ளனர். ஊரைச் சுற்றி கடன் வாங்கி அந்த படகை வாங்கினோம். படகு அங்கு சென்றால் திரும்ப வராது. மத்திய அரசும் மாநில அரசும் அதை மீட்டுக் கொடுங்கள்” என்று அழுது கொண்டே கோரிக்கை வைத்தார்.
மீனவரின் உறவினர் பவுனம்மாள் என்பவர் பேசும்போது, “எப்பொழுதும் கடலுக்கு செல்லமாட்டார். கரையில் உள்ள வேலைகளைத்தான் பார்ப்பார். இந்த முறைதான் கடலுக்குள் சென்றார். அவர்களை பிடித்துக் கொண்டார்கள். மத்திய அரசும் மாநில அரசும் படகையும் மீனவர்களையும் மீட்டுத்தர வேண்டும்.” என்றார்.