மதுரையில் 20 நாட்களாக வெட்ட வெளியில் கொட்டிப் பாதுகாக்கப்பட்டு வரும் நெல்லை அதிகாரிகள் இதுவரை கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மதுரையில் இந்த வருடம் 164 நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலூர் நாயத்தான்பட்டியயில் சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு 25 நாட்களுக்கு முன்பாக கொள்முதலுக்கு கொண்டுவரப்பட்டது. தற்பொழுது வரை கொள்முதல் செய்யப்படாததால் வெயிலிலும் மழையிலும் நனைந்து கிடக்கிறது. இதில் நெல்மணிகள் முளைக்கும் நிலைக்கு போய்விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நெல்லை தார்பாய் கொண்டு பாதுகாத்து வரும் விவசாயிகள் உடனடியாக கொள்முதல் செய்துகொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக விவசாயி ஒருவர் பேசுகையில், ''தார்பாய் வாங்கி நெல்லை பாதுகாத்து வைத்திருக்கிறோம். உடனடியாக அரசு தரப்பில் கொள்முதல் செய்து கொண்டால் கொஞ்சம் நன்றாக இருக்கும். மணிக்கு 3000 ரூபாய் வாடகை கொடுத்து நெல்லை அறுக்கிறோம். டிராக்டர் மூலமா கொண்டு வந்து கொட்ட 500 ரூபாய் செலவாகிறது. இதனால் எங்களுக்கு லாபமே இல்லை. இருந்தாலும் கொண்டு வந்த நெல்லை முறையாக விற்று அதில் காசு கிடைத்தால் எங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும். நாங்கள் நெல்லைக் கொட்டி வைத்து 20 நாட்களுக்கு மேல் ஆகிறது. யார்கிட்ட போய் சொல்வது'' என வேதனை தெரிவித்தார்.