தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநிலம் முழுவதும் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்தும், மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட வாரியாக ஆய்வு செய்து வருகிறார். மேலும், புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும், நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும் இந்தச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த முதல்வர், வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டார். சிறு குறு நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் பல்வேறு துறைகளில் 25 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 33 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, பல்வேறு துறைகளின் சார்பில் (32 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்) 22 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம், பொது நிவாரண நிதி, இலவச மனைப் பட்டா, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி என 26 பயனாளிகளுக்கு 2,39,500 ரூபாய் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் பேசிய முதல்வர், “கடலூர் மாவட்டத்தில் அதிக தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.495 கோடியில் கதவணை கட்டும் பணிகள் 40% நிறைவு பெற்றுள்ளது. தென்பெண்ணையாற்று குறுக்கே 33 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்படும். கடலூர் மாவட்டத்தில் 12,514 இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 1,554 மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.225 கோடி சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் சாலை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தொழில்துறையில் 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் ” என்றார்.
இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் அமைச்சர் எம்.சி சம்பத், மாவட்ட கரோனா சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி, அரசு செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவரித்தார். அப்போது அவர், "தமிழகத்தில் கரோனா நோயைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே அதிக அளவிலான கரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதனால் கரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. குறிப்பாக உரிய சிகிச்சை அளித்து வருவதால் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேசமயம் தொற்றினால் உயிரிழந்தவர்கள் விகிதம் குறைவாக இருக்கிறது” என்றார். கல்லூரி மாணவர்கள் தேர்ச்சி குறித்து பேசும்போது "மாணவர்கள் அனைவரும் தேர்விற்கான பணத்தைச் செலுத்திவிட்டு, எப்போது தேர்வு வரும்? தங்களுக்கு என்ன ஆகும் என்று எதிர்பார்த்து தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அதற்கு தீர்வு காண்பதற்காகவே அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
அவரிடம் செய்தியாளர்கள், இ-பாஸ் ரத்து குறித்து கேட்டதற்கு, "தமிழ்நாட்டில் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படுகிறது. இ-பாஸ் வழங்கப்படுவதால்தான் மேற்கொண்டு கரோனா பாதிப்பு ஏற்படும்போது, சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கண்டறிய முடிகிறது. நோய்த் தொற்றின் தாக்கம் தீவிரமாக இருப்பதால்தான் அரசு சில வழிமுறைகளைப் பின்பற்றுகிறது. அவசிய தேவைகள் இருந்தால் மட்டுமே இ-பாஸ் பெற்றுக் கொள்ளும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்," என்றார்.
நீட் தேர்வு குறித்த கேள்விக்கு, "கரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு நீட் தேர்வை நடத்த வலியுறுத்தி கடந்த ஜூலை மாதமே பிரதமருக்கு கடிதம் எழுதினேன். தற்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும் கடிதம் எழுதியிருக்கிறார், எனக் கூறினார்.
‘கரோனா ஆய்வுக் கூட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு உள்ளதே’ எனக் கேட்டதற்கு, "அனைவருக்கும் தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உரிய தகவல் கொடுக்கப்பட்டு விட்டது. அவர்கள் இங்கே வந்து கலந்து கொள்வது அவர்களுடைய கடமை. மேலும் இதில் கலந்து கொள்வது அவர்களுடைய விருப்பம் அதில். நாங்கள் குறுக்கிட முடியாது” என்றார்.