இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஈரோடு மாவட்டக் குழு சார்பில் எம்.கல்யாணசுந்தரம் இல்லத்தில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் சந்தன கடத்தல் வீரப்பன் தொடர்புடைய வனச்சரகர் சிதம்பரநாதன் கொலை வழக்கில் சேர்க்கப்பட்டுக் கடந்த 28.11.1997 ஆம் ஆண்டு ஈரோடு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மாதையன், ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதில் வீரப்பன் சகோதரர் மாதையன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் சிறையில் மரணம் அடைந்துவிட்டார். தற்போது தமிழக அரசு பிற ஆயுள் சிறைவாசிகளான ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோரை விடுதலை செய்துள்ளது. மேற்படி இரண்டு பேரும் 32 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து முடித்துள்ளனர். இந்த சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டி மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அந்தக் கோரிக்கையை ஏற்று இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு நன்றி தெரிவித்து கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் நோக்கமாகத் தமிழக சிறையில் தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகப் பல ஆயுள் சிறைவாசிகள் வாடுகின்றனர். அவர்களையும் விடுதலை செய்யத் தமிழக அரசு முன் வரவேண்டும். ஆயுள் சிறைவாசியின் முன் விடுதலை என்பது சிறைவாசிகள் தங்கள் தண்டனை முடித்துத் திரும்பவும் குடும்பத்துடன் சேர்ந்து வாழ நல் வாய்ப்புக்கான மனிதாபிமான செயலாகும். இந்த உரிமை மாநில அரசு அதிகாரம். மாநில அரசின் பரிந்துரையை ஆளுநர் கிடப்பில் போடுவது அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பு வழிகாட்டுதல் படி தவறானது. தமிழக ஆளுநர் 187 மாநில அரசின் முன் விடுதலை பரிந்துரையை நிராகரித்துள்ளது தவறானது. அது விருப்பு வெறுப்பு சார்ந்தது இந்தப் போக்கு. அரசியலமைப்பு நடைமுறையை முட்டுக்கட்டை போட்டுவிட்டுச் செல்லும் எனக் கவலைப்படுவதாக விவாதிக்கப்பட்டது.
அதில் வழக்கறிஞர் ப.பா.மோகன், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் வி.பி.குணசேகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதில் பேசிய வழக்கறிஞர் ப.பா.மோகன் ''சிறை என்பது ஒருவரைத் திருத்துவதற்காகத்தான் இருக்கிறதே தவிர அவரைத் தண்டித்து அங்கேயே சாகடிப்பதற்காக இல்லை. சுதந்திர இந்தியாவில் அவர்களும் மனிதர்கள்தான். சிறைவாசிகளுக்கு மனித உரிமை உண்டு. ஒருவர் 14 ஆண்டுகள் இருந்தாலே அவருடைய நடத்தை, சமூகத்தில் வாழ்வதற்குத் தன்னை திருத்திக் கொண்டுள்ளார்களா என்று பார்க்கச் சொல்கிறார்கள். அவை இருக்கிறது என்று சொன்னால் அவர்களுக்காகத் தனியாக குழு அமைத்து விடுவிப்பதற்காகச் சட்டத் திருத்தம் 433 ஏ கொண்டு வரப்பட்டுள்ளது. இதை ஆளுகின்றவர்கள் என்றைக்குமே கட்சிக்காகச் சாதகமாக்காமல் இருக்க வேண்டும்.
லீலாவதி கொலை வழக்கில் ஏழு வருடத்தில் வெளியே வந்தார்கள். கோவை மாணவிகள் வழக்கில் கொடூரமாக பஸ் எரித்துக் கொன்றவர்கள் வெளியே வந்தார்கள். ஆனால் ஆதிவாசிகள், தலித்துகள், சிறுபான்மை மக்கள், உழைக்கின்ற மக்கள் இவர்கள் கைது செய்யப்பட்டு அடைக்கப்படுகின்றபோது? ஆனால் அவர்களுக்கு இது பற்றித் தெரியாது. ஆனால் ஆளுங்கட்சிக்காரர்கள், ஆதிக்க மக்களுக்கு இது இருக்கிறது என்று தெரிகிறது என்பதை வருத்தத்துடன் நாங்கள் குறிப்பிடுகிறோம். இதைச் செய்திருக்கின்ற அரசை நாங்கள் பாராட்டுகிறது ஒரு பக்கம் அதே சமயத்தில் இஸ்லாமிய சிறைவாசிகள் 20 பேர் எந்த விதமான குற்றமும் கிடையாது 20 பேர் இன்றைக்கும் இருபது ஆண்டுகளுக்கு மேல் சிறையில் கிடக்கிறார்கள். குடும்பமே நசுங்கிப் போய் இருக்கிறது. 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று சொல்கிறோமே தவிர சிறையில் நடக்கக்கூடிய கொடுமைகள் சாதாரணமானது அல்ல. இதுபோன்ற சிறைவாசிகளுக்கும் சமுதாயத்தில் வாழ்க்கை உண்டு'' என்றார்.