தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னையில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெய்வேலி நகர அ.தி.மு.க மற்றும் என்எல்சி அண்ணா தொழிற் தொழிலாளர்கள் ஊழியர்கள் சங்கம் சார்பில் நெய்வேலி டவுன்ஷிப் செவ்வாய் சந்தை அருகே ஜெயலலிதா முழு உருவ வெங்கல சிலை ரூபாய் 10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை ஒன்பது அடி உயரம் கொண்டது. பீடம் ஏழு அடியில் அமைந்துள்ளது.
இந்த சிலை திறப்பு விழா நேற்று இரவு நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி கலந்துகொண்டு ஜெயலலிதா சிலையை திறந்து வைத்து பேசுகையில், “அ.தி.மு.கவை நிறுவிய எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு வாரிசுகள் கிடையாது; நாம்தான் அவர்களுக்கு வாரிசு. நாட்டு மக்களுக்காக அவர்கள் உழைத்தார்கள். அதனால் தான் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் இயக்கம். அதனால் தான் இந்த இயக்கத்தை யாராலும் உடைக்க முடியாது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. அதில் நாம் வெற்றி பெறுவதற்கு இங்கு கூடி உள்ளவர்களே சாட்சி. இதில் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என கூறுவார்கள்; இங்குள்ளவர்களின் முகத்தில் தெரியும் பிரகாசத்தை பார்க்கும் போது அது தெரிகிறது. எனவே கடலூர் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் வெற்றி பெறுவார் என தெரிகிறது.
நாங்கள் மக்களை நம்பி இருக்கிறோம்; மக்கள் சக்தி பெற்ற இயக்கம் அ.தி.மு.க. இந்த இயக்கத்தை உடைக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்தார். எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை நீதிமன்றத்தில் சந்தித்து வெற்றி காண்போம். ஆனால் தி.மு.க அமைச்சர்கள் பலர் வழக்கைக் கண்டு நடுங்கி கொண்டு இருக்கிறார்கள். அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் வாய்தா வாங்கிய இவர்கள் ஆட்சிக்கு வந்த பின் அவசர அவசரமாக வழக்கை நடத்தினார்கள்.
அ.தி.மு.க என்ற இயக்கத்துக்கு யார் துரோகம் செய்கிறார்களோ அவர்களுக்கு சிறை தான் தண்டனை; அதற்கு செந்தில் பாலாஜியே உதாரணம். சாதாரண செந்தில் பாலாஜியை அடையாளம் காட்டியது அ.தி.மு.க தான், நன்றி உள்ளவராக இருந்தால் கட்சிக்கு பணி செய்திருக்க வேண்டும். ஆனால் தீய சக்தியோடு சேர்ந்து மீண்டும் அமைச்சரானார். அவருக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரண்டு தெய்வங்கள் இன்று வரை தக்க தண்டனையை கொடுத்துள்ளது. எனவே அ.தி.மு.க.வை உடைக்க நினைத்தாலும், துரோகம் விளைவித்தாலும் அவர்களுக்கு கிடைக்கும் தண்டனை சிறை தண்டனையாக தான் இருக்கும்.
கடலூர் மாவட்டத்தில் புயல் வெள்ளம் என்ற இயற்கை பேரிடர் காலத்தில் விவசாயிகளின் துன்பத்தை உடனடியாக போக்கியது அ.தி.மு.க அரசு. விவசாயிகள் வாழ்க்கையில் ஏற்றம் பெற ஏராளமான திட்டத்தை கொண்டு வந்தோம். விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இந்த ஆட்சியில் இல்லை. எனவே கடலூர் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை காட்டுங்கள். தேர்தல் என்ற போர்வையில் எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றி காண்போம். வடலூர் வள்ளலார் பெருவெளியை தைப்பூசத்தின் போது 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்துகிறார்கள். இதில் தற்போது தி.மு.க அரசு அந்த நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து சர்வதேச மையம் அமைக்க உள்ளது. இதற்கு இப்பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மக்களின் கோபத்திற்கு தி.மு.க அரசு ஆளாகியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதே பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்தில் சர்வதேச மையத்தை அமைக்க வேண்டும்” என்றார்.