கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் இதுகுறித்து விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:-
கடலூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகள் உள்ளிட்ட குக்கிராம பகுதிகளிலுள்ள தனியார், பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குட்பட்ட ஏரி, குளங்கள் மற்றும் ஆறுகளில் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து 6000 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் லாரிகள் மூலம் வணிக ரீதியாக ஓட்டல்கள், கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். தற்சமயம், கோடைகால வறட்சியால் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பல தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது புகார்களின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் மாநில நிலத்தடி நீர் ஆதார மையத்திடம் தடையில்லா சான்றிதழ் பெறப்பட்ட பின்னரே நிலத்தடி நீரை எடுக்க வேண்டும், உரிமம் பெறாமல் தண்ணீர் எடுப்பவர்களை திருட்டு குற்றத்திற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 2014-ல் உத்தரவிட்டுள்ளது. எனவே, நீதிமன்ற உத்தரவின்படி நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து டேங்கர் லாரிகள் மூலம் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இலவச மின்சாரத்தை பயன்படுத்தி அனுமதி பெறாமல் வரம்பு மீறி நிலத்தடி நீரை உறிஞ்சி வணிக ரீதியாக விற்பனை செய்யும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதுடன், தண்ணீர் கொண்டு செல்லும் டேங்கர் லாரிகள் பறிமுதல் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.