கர்நாடகாவில் அதிக கனமழை பொழிவதால் மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறுவை சாகுபடிக்கு ஜீன் 25 ம் தேதி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்கிறார் அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர் ,பாண்டியன்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தவர், " கர்நாடகா, கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது . கர்நாடாகவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் அனைத்து அணைகளும் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவின் கபினி அணையிலிருந்து முதல் கட்டமா 35 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது நாளை முதல் கிருஷ்ணசாகர் அணையிலிருந்தும் நீர் திறந்து விடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் மேட்டூர் அணை வேகமாக நிரம்ப வாய்ப்புள்ளது. எனவே ஜுன் 25ந்தேதி குருவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேட்டூர் அணை திறக்கப்பட்டால் கடைமடை பாசன பகுதி வரைக்கும் தண்ணீர் கிடைக்குமா என்ற ஏக்கத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நீர்வளநிலவள திட்டத்தின் கீழ் ஏரிகள் மேம்படுத்தும் பணிக்கு டெண்டர் விடப்பட்டும் பணிகள் துவங்கப்படவில்லை. குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் தற்போது தான் டெண்டர் விடும் பணி துவங்கியுள்ளது.
இது குறித்து பொதுப்பணித் துறை பொறுப்பு வகிக்கும் தமிழக முதல்வர் உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும் . உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் கொண்ட குழுக்கள் அமைத்து ஆய்வு செய்து ஊழல் முறைகேடு இன்றி பணிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
கோரையாறு மற்றும் விளை நில பகுதிகளில் மணல் கொள்ளை இரவு பகலாக நடந்து வருகிறது விளை நிலப்பகுதிகளில் மணல் குவாரி என்ற பெயரில் மணல் கொள்ளையடிக்கப்பகிறது. இதனால் மழை வெள்ளக் காலங்களில் பேரிடர் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்றார்.