Skip to main content

அதிகரிக்கும் நீர் மோட்டார் ரிப்பேர் - கருணை காட்டுவார்களா அதிகாரிகள்?

Published on 27/04/2020 | Edited on 27/04/2020
Water Motor Ripper issue

 

கரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சில தினங்களுக்கு பிறகு விவசாய பொருட்கள் கொண்டு சென்று விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்களை கொண்டு சென்று விற்பனை செய்யவும், நெல் அறுவடை செய்ததை கொண்டு சென்று விற்கவும், உரம், பூச்சி மருந்து வாங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது விவசாயிகள் வேறு ஒரு பெரிய சிக்கலை எதிர்க்கொள்கின்றனர்.


நிலத்துக்கு நீர் பாய்ச்ச வடமாவட்டங்களில் நீர் மோட்டாரைதான் 99 சதவித விவசாயிகள் நம்பியுள்ளனர். கிணற்றில் இருந்தும், ஆழ்துளை கிணற்றில் போர் போட்டு நீர் மோட்டாரை உள்ளே இறக்கியும் நிலங்களுக்கு பாய்ச்சுகின்றனர். தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் கிணற்றில் தண்ணீர் வெகுவாக குறைந்துவிட்டது. ஆழ்துளை கிணற்றிலும் தண்ணீர் உள்ளே சென்றுள்ளது. இதனால் தண்ணீர் இல்லாமல் மோட்டார்கள் பழுதாகின்றன. இது ஒவ்வொரு கோடைக்காலத்திலும் ஏற்படும் பிரச்சனைதான். இந்த கோடைக்காலத்திலும் மோட்டார்கள் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன.

தற்போத 144 தடை உத்தரவு இருப்பதால் இந்த மோட்டார் சர்வீஸ் சென்டர்கள் திறக்கவில்லை. (மோட்டர் விற்பனை கடைகளுக்கு அனுமதி தந்துள்ளன மாவட்ட நிர்வாகங்கள். அதை விட முக்கியம், சர்விஸ் சென்டர்கள்தான் வேண்டும் என்கிறார்கள் விவசாயிகள்.) இதனால் மோட்டார்களை ரிப்பேர் செய்ய முடியாமல் தவிக்க தொடங்கியுள்ளார்கள்.

விவசாயிகள் மட்டுமல்லாமல், வீடுகளில் குடிநீர்க்காக ஆழ்துளை கிணறு அமைத்து மோட்டார் போட்டு நீர் எடுப்பவர்களும், கிராம பஞ்சாயத்துக்குகளில் ஏரிகளில், ஆறுகளில், நீர்பிடிப்பு பகுதிகளில் ஆழ்துறை கிணறு மூலமாக நீர் மோட்டார் வழியாக தண்ணீரை டேங்க்களுக்கு ஏற்றி அதன்பின் பொதுமக்களுக்கு குழாய் மூலம் பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் வழங்குகின்றன. இதிலும் பல மோட்டார்கள் ரிப்பேராகியுள்ளன. இதனை சரிசெய்ய முடியாமல் இந்த தரப்புகளும் தவிக்க தொடங்கியுள்ளன.

இதுபற்றி விவசாயிகள் மூலமாக தகவல் அறிந்த தமிழகத்தில் உள்ள வேலூர் உட்பட ஒரு சில மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மட்டும் நீர் மோட்டார் ரிப்பேர் சென்டர்களுக்கு அனுமதி வழங்கி கடிதம் வழங்கியுள்ளனர். இங்கு சர்வீஸ் சென்டர்கள் திறக்கப்பட்டு மோட்டார்கள் ரிப்பேர்கள் நடக்கின்றன, அவர்களுக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மற்ற மாவட்ட விவசாய துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் முறையிட்டால் மத்திய, மாநில அரசுகளின் உத்தரவில் அப்படியில்லை எனச்சொல்லி மறுக்கிறார்களாம். இதனால் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை உட்பட வடமாவட்டங்களில் கிணற்று பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிரச்சனைக்கு அரசும், அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா என காத்துள்ளார்கள் விவசாயிகளும், பஞ்சாயத்து நிர்வாகங்களும், பொதுமக்களும்.

 

 


 

சார்ந்த செய்திகள்