இறால் குட்டைகளால் நிலத்தடி நீர் உப்பாக மாறி குடிநீர் பஞ்சம் ஏற்படுவதோடு, விவசாய நிலங்களையும் பாழ்படுத்தி வருவதாக மீனவர்களும், விவசாயிகளும் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே வானகிரி,பூம்புகார்,உள்ளிட்ட மீனவர் கிராமத்தில் கோடைவெயிலின் தாக்கத்தை மிஞ்சும் வகையில், கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் அருகில் அதிக அளவில் இறால் குட்டைகள் அனுமதியில்லாமல் உருவாகிவருவது தான். இறால்குட்டைகளுக்கு கடல் நீரை காவிரி ஆற்றின் வழியாக உறிஞ்சி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக மாறி குடிநீர் குழாய்களில் வரும் தண்ணீர் கூட உப்பாகி வருவதால் அன்றாட தேவைக்கே பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.
"குடிநீருக்காக இரண்டு கிலோமீட்டர் மூன்று கிலோமீட்டர் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருவதாகவும், இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறும் அப்பகுதிமக்கள் ஆத்திரமடைந்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக அனுமதியின்றி செயல்படும் இறால் குட்டைகளை அகற்றி கிராமத்தில் குடிநீர் பஞ்சத்தை போக்க வேண்டும். இல்லை என்றால் பெரும் போராட்டம் நடத்துவோம்." என்றனர்.