கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சியில் 500க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அமைந்துள்ள கடைகளுக்கு முன்பு பல்வேறு ஆக்கிரமிப்புகள் இருப்பதாக புலியூர் பேரூராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக புலியூர் பேரூராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஒலிபெருக்கி மூலம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை அடுத்து சில கடை உரிமையாளர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
இந்நிலையில், புலியூர் கடைவீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாத கடைகளின் பந்தல்கள் மற்றும் விளம்பர பதாகைகளை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றும் பணி நடைபெற்றது. புலியூர் கடைவீதியில் 100க்கும் மேலான சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் உள்ள நிலையில், முதல் நாளாக இன்று சுமார் 20 கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் புலியூர் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.