தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளும், அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி தலைவர்களும் மேயர் பதவி, நகரமன்ற தலைவர் பதவி, பேரூராட்சி தலைவர் பதவி, துணை தலைவர் பதவிகளுக்கான பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்றுவருகிறது.
அதேநேரத்தில் வார்டுகள் குறித்தும், எத்தனை இடங்கள் என்பதை குறித்தும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டச் செயலாளர்களுடன் பேசிக்கொள்ளுங்கள் என திமுக, அதிமுக கட்சி தலைமைகள் கூட்டணி கட்சியினரிடம் தெரிவித்துவிட்டன. அதனை தொடர்ந்து அந்தந்த மாவட்டத்தில் அதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு செய்வதற்கான கூட்டம் தனியார் மண்டபத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜ் தலைமையில் ஜனவரி 29 ஆம் தேதி நடைப்பெற்றது. இதில் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், மதிமுக, தமுமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய நான்கு நகராட்சிக்கு உட்பட்ட 126 வார்டுகளில் 3 வார்டுகளும், நாட்றம்பள்ளி, உதயேந்திரம், ஆலங்காயம் ஆகிய மூன்று பேருராட்சிக்கு உட்பட்ட 45 வார்டுகளில் 1 வார்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்வதாக திமுக முடிவு செய்து உள்ளதாக திமுக தரப்பில் கூறியுள்ளனர்.
இதில் அதிருப்தியாகியுள்ளனர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர். நாங்கள் இந்த மாவட்டத்தில் வலிமையாகவுள்ளோம், எங்களுக்கு கூடுதல் இடம் வேண்டும் என கேட்டதாக சொல்லப்படுகிறது. அதனால், இந்தப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் விசிக பொறுப்பாளர்கள் அங்கிருந்து கிளம்பியுள்ளனர். மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என சொல்லப்படுகிறது.