உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15,824 நிர்ணயித்து தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும் கூட, தமிழக அரசு நிர்ணயித்துள்ள ஊதிய விகிதம் உச்சநீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஊதியத்தை விட மிகவும் குறைவாக உள்ளது என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை பிறப்பித்துள்ள அரசாணையில், 25 அல்லது அதற்கும் குறைவான படுக்கைகள் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றுவோருக்கு குறைந்தபட்சமாக ரூ.15,824 வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. படுக்கைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒவ்வொரு நிலைக்கும் ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைகளில் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.16,124 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் தனியார் மருத்துவமனைகளில் ரூ.6000 முதல் 7,000 வரை மட்டுமே ஊதியம் பெற்று வந்த செவிலியர்களுக்கு, அதைவிட ஒன்றரை மடங்கு அதிகமாக ஊதியம் கிடைக்கும். இது செவிலியர்களின் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
ஆனால், இது மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட ஊதியத்தை விட குறைவாகும். செவிலியர் ஊதியம் குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர்களின் வாழ்க்கை நிலை குறித்து ஆய்வு செய்யவும், அவர்களுக்கான ஊதிய விகிதங்கள் குறித்து பரிந்துரைக்கவும் வல்லுனர் குழு அமைக்கும்படி மத்திய அரசுக்கு ஆணையிட்டது. அதன்படி அரசு அமைத்த வல்லுனர் குழு 50 படுக்கைகளுக்கு குறைவாக உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.20,000 வழங்கப்பட வேண்டும்.
ஆனால், அனைத்து நிலைகளிலுமே உச்சநீதிமன்ற ஆணைப்படி மத்திய அரசு பரிந்துரைத்த ஊதியத்தை விட மாநில அரசு நிர்ணயித்துள்ள ஊதியம் மிகவும் குறைவாக உள்ளது. மத்திய அரசின் பரிந்துரையை விட குறைந்தபட்சம் 21 விழுக்காடு முதல் அதிகபட்சமாக 50% வரை ஊதிய விதிதம் குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அறப்போராட்டங்களின் மூலமாகவும், சட்டப்போராட்டங்களின் மூலமாகவும் செவிலியர்கள் போராடிப் பெற்ற இவ்வுரிமையை தனியார் மருத்துவமனைகளுக்கு சாதகமாக தமிழக அரசு சிதைத்து விடக் கூடாது.
எனவே, மத்திய அரசு பரிந்துரைத்தவாறு செவிலியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.20,000 வழங்க வேண்டும். 200 படுக்கைகளுக்கு மேல் உள்ள மருத்துவமனைகளின் செவிலியர்களுக்கு அரசு ஊதியத்துக்கு இணையான ஊதியமும் வழங்கப்பட வேண்டும். இதற்கேற்றவாறு அரசாணையில் திருத்தம் செய்வதுடன், அது முழுமையாக செயல்படுத்தப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.
செவிலியர்களின் மீதான உழைப்புச் சுரண்டல்கள் தனியார் துறையில் மட்டுமின்றி, அரசுத்துறையிலும் ஒழிக்கப்பட வேண்டும். தனியார் துறையில் செவிலியர்களின் உழைப்பு ரூ.6000 ஊதியம் கொடுத்து சுரண்டப்பட்டால், அரசு மருத்துவமனைகளின் ரூ.7000 கொடுத்து சுரண்டப்படுகிறது. இதற்கும் முடிவு காணும் வகையில் அரசுத்துறையில் பணியாற்றும் ஒப்பந்த செவிலியர்கள் அனைவரையும் பணி நிலைப்பு செய்து அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.