திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டு மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் வைகாசி திருவிழாவின் போது அந்தப் பகுதியைச் சேர்ந்த பட்டியலின மக்கள் தங்களுக்கு தனி மண்டகப்படி வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தபடி இருந்து வருகின்றனர்.
அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த கோரிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக தனி மண்டகப்படி உரிமை கேட்டு பழைய வத்தலக்குண்டு தேவேந்திர வேளாளர் குல சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு கோவிலில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை அடுத்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இடையே தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து மீண்டும் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு தொடங்கிய போராட்டம் இன்று காலை வரை நீடித்து வருகிறது. மண்டகப்படி கேட்டு கோரிக்கை வைத்து உள்ள பொதுமக்கள் கோவில் வளாகத்திலும் கோவில் வெளியே பந்தல் அமைத்தும் உணவு சமைத்துச் சாப்பிட்டு இரவு பகலாக தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.