Skip to main content

''தொண்டர்கள் விருப்பம் இன்று நடந்துள்ளது;கலந்துபேசி முடிவெடுப்போம்''-ஓபிஎஸ் பேட்டி!

Published on 17/08/2022 | Edited on 17/08/2022

 

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லாது என ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று 11.30 மணிக்கு வெளியிட்ட தீர்ப்பில், 'அதிமுகவில் ஜூன் 23 ஆம் நடந்த பொதுக் குழுவில் இருந்த நிலையே நீடிக்கும். எனவே ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து பொதுக்குழுக் கூட்டம் நடத்தவேண்டும். தனிக் கூட்டம் கூடக்கூடாது. பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும். இபிஎஸ்-ஐ பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது. பொதுக்குழுவை கூட்டுவதற்கு 30 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது' என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

இந்த உத்தரவால் அதிமுகவில் இரட்டை தலைமையே தொடர்கிறது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மறுபுறம் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

 

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் சென்று மரியாதை செலுத்திய ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. அனைவரையும் அரவணைத்து செல்வதுதான் தலைமைக்கு இருக்க வேண்டிய பண்பு. தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் விமர்சனத்தை தாங்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் தரப்பு, எங்கள் தரப்பு என்றில்லை தேவைப்பட்டால் கலந்துபேசி முடிவெடுப்போம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தியாகங்களை மனதில் வைத்து செயல்படுவோம். இது தொண்டர்களின் இயக்கம் யார் நினைத்தாலும் அதிமுகவை பிளவுபடுத்த முடியாது. தொண்டர்கள் என்ன விரும்பினார்களோ இன்று அது நடந்துள்ளது. அனைவரும் ஒன்றுபட வேண்டும். நீக்கப்பட்ட அனைவரும் சேர்க்கப்பட வேண்டும். ஜூன் 23 ஆம் தேதிக்கு முன் யார் யார் என்னென்ன பொறுப்புகளில், பதவிகளில் இருந்தார்களோ அவர்கள் தொடர்ந்து அதில் நீடிப்பார்கள்'' என்றார்.

 

  

சார்ந்த செய்திகள்