வயிற்றுப் பசியைப் போக்க நல்ல உணவு கிடைக்கிறது. நம் அறிவுப் பசியைப் போக்க நல்ல நல்ல புத்தகங்களும் கிடைக்கிறது. ஆனால் பார்வை மாற்றுத்திறனாளியான நமக்கு (பிரைலி) பாடப் புத்தகங்கள் மற்ற நல்ல புத்தகங்களை வாசிக்கும் வசதிகள் கிடைக்கவில்லையே! என்ற ஏக்கம் கல்லூரி மாணவரான பொன்.சக்திவேலுக்கு ஏற்பட்டது. ஒரு நாள் வகுப்புகளுக்குப் போகவில்லை என்றாலும் அந்தப் பாடத்தை அறிந்து கொள்ள முடியாத நிலை. நடத்தும் பாடத்தைக் கூட மறுபடி படிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் ஒரு சிறிய ஆடியோ ரெக்கார்டரை வாங்கி ஆசிரியருக்கே தெரியாமல் பதிவு செய்து விடுதியில் வந்து அதைத் திருப்பிக் கேட்கத் தொடங்கினார்.
இந்த முறை நல்லா இருக்கிறதே என்று நினைத்தார். அப்போது தான் கூகுள் எழுத்துணரியாக்கத்தை அறிமுகம் செய்தது. ஆய்வு நிறைஞர், முனைவர் பட்டத்திற்கான தேடல்களுக்கு எழுத்துணரியாக்கம் கை கொடுத்தது. இதற்காக நவீன ஸ்கேனர் வாங்கி நண்பர் உதவியுடன் அதனைப் பயன்படுத்தித் தான் விரும்பும் புத்தகங்களை வாங்கி ஸ்கேன் செய்து குரல் மொழியாக மாற்றி அதனை அறிந்து கொண்டார். நவீன இலக்கியங்கள், வரலாறு, அறிவியல் என ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படித்து தன் அறிவுப் பசியை போக்கினார்.
தான் மட்டும் அறிந்து கொள்வது மட்டும் போதாது தன்னைப் போல உள்ள மற்றவர்களும் படிக்க வேண்டும் என்பதை உணர்ந்த சிலட்டூர் அரசுப் பள்ளி தமிழாசிரியர் பொன்.சக்திவேல் ஒரு வாட்ஸ் அப் குழு தொடங்கி தன்னைப் போலப் புத்தக தேடல்களில் இருக்கும் பார்வை மாற்றுத் திறனாளிகளை ஒன்றிணைத்து அவர்கள் விரும்பும் புத்தகங்களை மின்னூலாக்கிக் கொடுத்து வருகிறார். இதுவரை சுமார் ஆயிரக்கணக்கான 10 லட்சம் பக்கங்கள் கொண்ட புத்தகங்களை மின்னூலாக்கிக் கொடுத்திருக்கிறார். இதனால் பலர் ஆய்வுப் படிப்புகள் முதல் போட்டித் தேர்வுகளுக்கான படிப்புகள் வரை படித்து வருவதுடன் இலக்கியங்களையும் படித்துப் பயனடைந்து வருகின்றனர்.
இது குறித்து புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி சண்முகநாதபுரம் பொன்.சக்திவேல் (சிலட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர்) நம்மிடம் பேசுகையில், “பார்வை மாற்றுத்திறனாளிகள் படிப்பதற்கும் படித்ததை மறுபடி படித்துப் பார்க்கவும் சிரமப்படுகிறோம். வகுப்பறையில் இலக்கியங்கள், வரலாறுகள் நடத்தும் போது அதை முழுமையாக நாம் படிக்க வேண்டும் என்ற ஆசை வரும். ஆனால் சராசரியான புத்தகங்களை நம்மால் படிக்க முடிவதில்லை. இது போல நானும் பாதிக்கப்பட்டேன். அதனால் தான் நாம் விரும்பிய புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற ஆசையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் முனைவர் பட்டத்திற்காகப் படிக்கும் போது நிமிடத்திற்கு 160 பக்கம் ஸ்கேன் செய்யும் ஸ்கேனர் வாங்கினேன். அதில் புத்தக பைண்டிங்களை பிரித்து வைத்தால் வேகமாக ஸ்கேன் செய்யும். அப்படியே எழுத்துணரியாக்கம் செய்து கொள்ள 1000 பக்கத்தை அரை மணி நேரத்தில் குரல் மொழியாக்கிவிட முடிகிறது.
நம்மைப் போல மற்றவர்களும் படிக்க வேண்டும் என்று ஒரு வாட்ஸ் அப் குழு தொடங்கி விருப்பம் கேட்டேன். தற்போது வரை 34 பேர் இணைந்திருக்கிறார்கள். சென்னை, மதுரை, கோவை என எந்த ஊரில் புத்தகத் திருவிழா நடந்தாலும் ஒவ்வொரு உறுப்பினரும் படிக்க ஆசைப்படும் புத்தகங்களின் விபரங்களைச் சேகரித்து அதற்கு ஆகும் செலவுத் தொகையை அனைவரும் பங்கிட்டு புத்தகங்களை வாங்கி மின்னாக்கம் செய்து அனுப்புகிறேன்” எனத் தெரிவித்தார். இதுவரை எத்தனை புத்தகங்கள் மின்னாக்கம் செய்திருப்பீர்கள்? என்ற கேள்விக்கு, “சுமார் ஆயிரம் புத்தகங்கள். அதாவது 10 லட்சம் பக்கங்கள் மாற்றி இருக்கிறோம். கலைஞரின் நெஞ்சுக்கு நீதி, ஆனந்தரங்கர் நாட்குறிப்பு உள்பட அதிக பக்கங்கள் கொண்ட புத்தகங்கள் மின்னாக்கி படிச்சு முடிச்சாச்சு. அதே போலக் கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி கல்லூரி முதல்வர் வரை அவர்களுக்குத் தேவையான புத்தகங்களை எனக்கு அனுப்புவார்கள் அதனை உடனே மின்னாக்கம் செய்து கொடுக்கிறேன். கிருஷ்ணகிரி கல்லூரி முதல்வர் கண்ணன் சாருக்கு மட்டும் 200 புத்தகங்கள் மின்னாக்கம் செய்து கொடுத்திருக்கிறேன். எங்கள் வாட்ஸ் அப் குழு மூலமாக இதுவரை 6 சுற்றுகளாக சுமார் 350 புத்தகங்கள் வாங்கி மின்னாக்கம் செய்திருக்கிறோம்.
அதே போலப் போட்டித் தேர்வுகளுக்குப் பலருக்கும் இந்த மின்னாக்கம் பேருதவியாக உள்ளது. பலர் வேலை வாங்கிட்டாங்க. பலர் பதவி உயர்வுக்கும் பயன்கிடைத்திருக்கும். இன்னும் ஏராளமான ஆய்வு மாணவர்கள் படிக்க உதவியாக உள்ளது. கடந்த வாரம் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியை உதவிப் பேராசிரியர் தேர்வு படிக்கத் தேவையான புத்தகங்களை வாங்கி எனக்கு அனுப்பிவிட்டுத் தேர்வுக்குக் குறைவான நாட்களே உள்ளது சீக்கிரமாக மின்னூலாக்கி அனுப்புங்கள் என்றார். மாலை 4 மணிக்கு வந்த புத்தகங்களை இரவு 9 மணிக்குள் 2500 பக்கங்களையும் ஸ்கேன் செய்து மின்னூலாக்கி அனுப்பிட்டேன். அதைப் பார்த்த அந்த ஆசிரியைக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. தேர்வில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதே போல ஸ்கேன் செய்யப்பட்ட புத்தகங்களைக் குரல் மொழியாக்குவது ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் அந்த புத்தகங்களை எளிமையாக பிரைலி எழுத்து புத்தகங்களாக மாற்றி எப்போதும் வைத்திருந்து படித்துப் பாதுகாக்க முடிகிறது. இப்போது நூலகங்களில் மின்னாக்க நூல்களை வைக்க முதலமைச்சர் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.