Skip to main content

எம்ஜிஆருக்கு பிடிக்காத விசில் சத்தம் அதிமுக அமைச்சர்களுக்கு பிடிப்பது ஏனோ?

Published on 10/03/2020 | Edited on 10/03/2020

எம்ஜிஆர் வழியில் ஆட்சி செய்கிறோம் என்று ஆளும் கட்சியின் முதல்வர் முதல் மந்திரிகள் வரை எப்போதும் அடிக்கடி சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். எம்ஜிஆருக்கு பிடிக்காத விசில் சத்தத்தை அதிமுக மந்திரிகள் மிகவும் விரும்புவது ஏனோ தெரியவில்லை. எம்ஜிஆருக்கு விசில் சத்தம் பிடிக்காது என்பது இவர்களுக்குத் தெரியாமல் இருப்பதுதான் ஆச்சரியம்.

 

visel issue - MGR - ADMK Ministers

 



சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அரசு பள்ளியில் நடந்த பிறந்தநாள் விளையாட்டு பரிசளிப்பு விழாவில் மாணவர்கள் சிலர் விசில் அடித்தனர். இதைப்பார்த்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இங்கு எம்எல்ஏ ஆறுமுகத்துக்கும் பள்ளி மாணவர்களுக்கும் இடையே விசில் அடிக்கும் போட்டி நடத்தப்படும் இதில் அதிக சத்தத்துடன் விசில் அடிப்பவருக்கு பரிசு வழங்கப்படும் என்றார். இதில் அதிக சத்தத்துடன் விசில் அடித்து பள்ளி மாணவி ஒருவர் வெற்றி பெற்றார்.

கடந்த வாரம் விருதுநகர் வத்திராயிருப்பு அருகே சுந்தரபாண்டியத்தில் ஜெ பிறந்தநாள் விழாவில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நான் மண்டை உடைப்பு உள்ளிட்ட 16 வழக்குகளை சந்தித்தவர். அதனால்தான் மந்திரியானேன். அதிமுகவினர் காந்தி கைபிடித்து வந்தவர்கள் அல்ல. எம்ஜிஆர் கைபிடித்து வந்தவர்கள் வீரத்தோடு தான் இருப்போம். அதிமுக-காரன் விசில் அடிப்பான், சவுண்டு விடுவான், தேவைப்பட்டால் கல்லெடுத்து எறிவான் என்றார்.

 



ஆனால் எம்ஜிஆருக்கு விசில் அடிப்பது பிடிக்காது என்பதற்கு பழைய காரணத்தை அவருடைய தொண்டர்கள் சொல்கிறார்கள். அது என்னவென்றால் 1980 ஆண்டு மே மாதம் சட்டசபை இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு கோவை சென்றபோது பஸ் நிலையம் அருகே ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்ட மேடையில் எம்ஜிஆர் ஏறியபோது அதிமுக தொண்டர்கள் சுமார் 30 நிமிடம் இடைவிடாமல் விசில் அடிக்க ஆரம்பித்தனர். இதனால் மற்ற தலைவர்கள் தங்கள் பேச்சை அவசர அவசரமாக முடித்துக்கொண்டனர்.

இதைப்பார்த்து இறுகிய முகத்துடன் எம்ஜிஆர் மைக்கை பிடித்தார். அவர் பேசத் தொடங்கியதும் மீண்டும் விசில் சத்தம் விண்ணை பிளந்தது. எம்ஜிஆர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். காது கிழியும் வண்ணம் விசில் அடித்த அதிமுக தொண்டர்கள் எம்ஜிஆர் அமைதியாக இருப்பதைப் பார்த்தும், அவர் முகம் கோபமாக இருப்பதை பார்த்தும் அமைதியாகினர். 

 



கூட்டம் அமைதியான பின்பு எம்ஜிஆர் பேசுகையில் விசில் அடிப்பது கெட்ட பழக்கம் எனது தொண்டர்கள் யாரும் இனி விசில் அடிக்க கூடாது. விசில் அடிப்பதாக இருந்தால் நான் கூட்டத்தில் பேச மாட்டேன் என தெரிவித்தார். 

உடனே தொண்டர்கள் இனி விசில் அடிக்க மாட்டோம் என்று கோஷமிட்டனர். ஆனால் எம்ஜிஆர் வெறுத்த விசில் சத்தத்தை இப்போது அமைச்சர்கள் ஊக்குவித்து வருகிறார்கள். எம்ஜிஆருக்கு விசில் அடிப்பது பிடிக்காது என்பது ஏனோ அமைச்சர்களுக்கு தெரியவில்லை. தற்போது எம்ஜிஆர் விரும்பாததை எல்லாம் செய்துகொண்டு எம்ஜிஆர் ஆட்சி என்று சொல்வது தான் வேதனை அளிக்கிறது என்கிறார் தீவிர எம்ஜிஆர் விசுவாசி ஒருவர். 

 

சார்ந்த செய்திகள்