விருதுநகர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இன்று (20.12.2019) சிவகாசி அருகே நடையனேரி கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
வாஸ்து மற்றும் ஜோதிட அடிப்படையில், ராசியான மூலையில் அமைந்துள்ள, சிவகாசி ஒன்றியத்தின் நடையநேரியிலிருந்து பிரச்சாரத்தை துவக்குவது வெற்றிக்கு வழிவகுக்கும் என்ற கே.டி.ராஜேந்திரபாலாஜியின் அசைக்க முடியாத நம்பிக்கையினால்தான், அந்த கிராமம் முதல்‘பிரச்சார ஸ்பாட்’ஆனது. சிவகாசி ஒன்றியத்தில் 23 இடங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்ட கே.டி.ராஜேந்திரபாலாஜி “வகுப்புவாதமோ, இன வாதமோ, மோதல்களோ இல்லாத நல்லாட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகின்றது.
பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாயும் பொங்கல் பரிசு தொகுப்பும் கொடுத்து வருவது எடப்பாடியார் அரசு. பொங்கல் தொகுப்பு பொருட்களை வழங்கவிடாமல் திமுக தடை போடுகிறது. உங்களுக்காக எல்லா வகையிலும் உழைக்கக்கூடிய கட்சி அதிமுக. நான் அமைச்சராக இருக்கிறேன். வேட்பாளராகப் போட்டியிடும் புதுப்பட்டி கருப்பசாமி ஒன்றிய கழக செயலாளராக இருக்கிறார். உள்ளாட்சியில் பதவிக்கு வரக்கூடியவர் உங்களுக்கு உழைக்கக்கூடியவராக, தெரிந்தவராக இருந்தால் மட்டுமே உங்கள் பகுதிக்கு தேவயைான தி்ட்டங்களைப் பெற முடியும்.
சிவகாசி யூனியன் தலைவராக அதிமுகவைச் சேர்ந்தவர் வந்தால்தான் ஊராட்சி பகுதிகளில் நல்ல பணிகளைச் செய்ய முடியும்.”என்று பேசினார். ஆளும் கட்சியான அதிமுகவுக்கு வாக்களிக்காவிட்டால் ஊராட்சி பகுதிகளுக்கு ஒரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை என்பதைச் சொல்லாமல் சொல்கிறார், அனைத்து மக்களுக்கும் பொதுவான அமைச்சராக இருக்கக்கூடிய கே.டி.ராஜேந்திரபாலாஜி.