கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் கவியரசு(48) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் ஜூலை 18- ந்தேதி சனிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருடைய மறைவானது விருத்தாசலம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவர் மருத்துவமனைக்கு செல்லும் முன், சிகிச்சைக்கு செல்வதை தன் முகநூலில் பதிவிட்டு சக பணியாளர்கள் அனைவருக்கும் நன்றியும் கூறிவிட்டு சென்றுள்ளார். அவருடைய மறைவுக்கு பிறகு அந்த பதிவை படிப்பவர்கள் அனைவரின் மனதையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
அந்த பதிவில்,
''அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய விருதை வட்ட வாழ் பெருங்குடி மக்களே! என் மேல் எப்போதும் பாசமழை பொழியும் ஊடக நண்பர்களே! எப்போதும் அன்பு பாராட்டும் காவல் அலுவலர்களே! எனது இரண்டாண்டு வருவாய் வட்டாட்சியர் பணியில் உடன் பயணித்த எனது பாசமிக்க கிராம நிர்வாக அலுவர்களே! அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலர்களே! வருவாய ஆய்வாளர்களே ! கிராம உதவியாளர்களே ! உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை சிரம் தாழ்த்தி சமர்ப்பித்துக்கொள்கின்றேன். COVID-19 symptoms காரணமாக தற்போது சிதம்பரம் RMMCH மருத்துமனையில் சிகிச்சையில் உள்ளதால் வருவாய் வட்டாட்சியர் பணியில் இருந்து விலகி விடைபெருகின்றேன்! சிறப்பு நன்றிகள் எனது ஈப்பு ஓட்டுனர் பாலு ஒரு சகோதரனைப்போல இதுகாறும் எனை பாதுகாத்தாய் ! மீண்டும் மீண்டு வந்து அனைவருக்கும் நன்றி சொல்வேன் என்ற நம்பிக்கையுடன்!'' என குறிப்பிட்டுள்ளார். இது பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவரின் இதயத்தை வருட செய்கிறது.