உதயசூரியன் சின்னம், குணசேகரன் கண்ணுக்கு மட்டும், தாமரையாகத் தெரிந்த அதிசயம், விருதுநகர் வாக்குச்சாவடி எண் 139-ல் நிகழ்ந்து, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பை ஏற்படுத்தியது.
விருதுநகர் நீராவி தெருவைச் சேர்ந்த இளைஞர் குணசேகரன், இன்று வாக்குச்சாவடி எண் 139-ல் வாக்குப் பதிவு செய்ய வந்தார். ‘அய்யோ.. நான் 1-வது பட்டனை (உதயசூரியன்) அமுக்கினேன். இரண்டாவது பட்டனில் (தாமரை) லைட் எரிகிறது. பெரிய கொடுமையாக இருக்கிறது’ என்று வாக்குச்சாவடி அலுவலரிடம் புகார் தெரிவித்தார். அதனால், வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
விருதுநகர் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ரமணனுக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட, ‘தொடர்ந்து வாக்குப்பதிவு நடத்தி சோதனை மேற்கொள்ளலாம்’ என்று அவர் கூற, திமுகவினர் அங்கு திரண்டுவிட, பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. புகாரளித்த குணசேகரனுக்கு வாக்களிப்பதற்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டது. வேட்பாளர்களின் நேரடி முகவர்கள் முன்னிலையில், அவர் மீண்டும் வாக்களித்தபோது, 1-வது பட்டனை அமுக்கினார். 1-வது பட்டனிலேயே லைட் எரிந்தது. குணசேகரன் சுட்டிக்காட்டிய தாமரை எப்படியோ, முகவர்கள் முன்னிலையில் மாயமானது.
“ஓட்டு மெஷின் நல்லாத்தானே வேலை செய்யுது. தேவையில்லாம பிரச்சனைய கிளப்பி ஒரு மணி நேரத்த வேஸ்ட் பண்ணிட்டாங்க. பப்ளிக்கயும் டென்ஷன் ஆக்கிட்டாங்க.” என்று அந்த வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக காத்திருந்த வாக்காளர் ஒருவர் சத்தமாக புலம்பினார்.