ஒன்றியக்குழு உறுப்பினர் வேட்புமனு என்றாலும், அதில் ஒரு குறை காணப்பட்டு நிராகரிக்கப்படும்போது, சம்மந்தப்பட்ட கட்சியினர் நொந்துதான் போவார்கள். ஏனென்றால்- ஒன்றியக்குழு உறுப்பினர் வேட்பாளராக வேண்டும் என்பதற்காக, அந்த நபரும் அவருடைய ஆதரவாளர்களும் எடுத்துக்கொண்ட முயற்சியெல்லாம், நிராகரிப்பால் வீணாகிவிடும் என்பதனால்தான். வேட்பு மனு விஷயத்தில், போட்டியிடுபவர் தன்னுடைய விபரங்களை எந்த அளவுக்கு குறையில்லாமல் அளிக்கிறாரோ, அதுபோல் அதே வார்டில் தன்னோடு போட்டியிடுபவர்களின் வேட்பு மனுக்களும் உள்ளனவா? குறைகள் ஏதேனும் உள்ளனவா? என்று அலசி ஆராய்வதிலும் மிகுந்த கவனம் செலுத்துவர். வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் அப்படி ஒரு வேட்புமனு குறை கண்டறியப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. என்ன குறையென்று பார்ப்போம்!
‘7- வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுகவைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில் குளறுபடி உள்ளது. அதனால், நிராகரிக்கவேண்டும்.’என்று திமுக ஒன்றிய செயலாளர் முனியாண்டி, விருதுநகர் மாவட்ட திமுக இலக்கிய அணி அமைப்பாளர் அன்னக்கொடி, திமுக வேட்பாளர் தர்மராஜ் ஆகியோர் தேர்தல் அலுவலர் வர்கீஸிடம் ஆட்சேபனை தெரிவித்தனர். வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளபடி வாக்காளர் வரிசை எண்ணில் பரமசிவம் என்ற பெயரே இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினர். வேட்புமனு பரிசீலனை நாளில் பரமசிவம் (அதிமுக) தரப்பினர் வேட்புமனுவை வாங்கி திருத்தும் செயலில் விதிமீறலாக ஈடுபட்டபோது, திமுக தரப்பினர் கவனித்துவிட்டதால் தான் தவறான இந்த விபரத்தை அறிய முடிந்திருக்கிறது.
“பரிசீலனை நாளில் அதிமுக ஆளும்கட்சி என்பதால் வேட்புமனுவை திருத்துவதற்கு அனுமதிக்கின்றீர்களா? பரமசிவம் வேட்புமனுவை நிராகரித்தே ஆகவேண்டும். அவருடைய பெயர் இடம்பெறாத, செல்லத்தக்க வேட்பு மனுக்களின் பட்டியலை ஒட்டியபிறகே இங்கிருந்து நகர்வோம்.” என்று குரல் உயர்த்தியபிறகே, பரமசிவத்தின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், அதே 7- வது வார்டுக்கு பரமசிவத்தின் மாற்று வேட்பாளர் என, அவருடைய மனைவி சாந்தியின் மனு ஏற்கப்பட்டுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், சாந்தி தனது வேட்புமனுவில், அவருடைய வாக்காளர் வரிசை எண் மூவரைவென்றான் ஊராட்சியில் வார்டு 3, பாகம் எண் 107, வரிசை எண் 278 என குறிப்பிட்டுள்ளார். ஆனால், அந்த வரிசை எண்ணில் பாப்பா என்பவரின் பெயர் உள்ளது. சாந்தியின் மனுவுக்கும் திமுக தரப்பில் கடிதம் மூலம் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், சாந்தியின் மனு ஏற்கப்பட்டு, செல்லத்தக்க வேட்பு மனுக்களில் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
“உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு பரிசீலனை என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பாகவே நடக்கிறது. ஆளும் கட்சியினரின் வேட்புமனு என்றால் தேர்தல் அலுவலர்கள் சரிபார்ப்பதே இல்லை. அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள். வத்திராயிருப்பு ஒன்றியத்திலும் அதுதான் நடந்திருக்கிறது.”என்று குமுறலாகச் சொல்கிறது திமுக தரப்பு.