பாரதிய ஜனதா கட்சியின் விருதுநகர் மாவட்ட (அரசு தொடர்பு பிரிவு) தலைவர் ஜெயக்கொடி உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பத்தை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனுவை கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சருக்கும் அனுப்பியிருக்கும் அந்த மனுவில், ‘கடந்த 2022 ஜூலை மாதம், தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்காக சிவகாசியில் தோண்டப்பட்ட பள்ளங்களால் நான்கு ரத வீதிகள் மோசமான நிலையிலும் போக்குவரத்துக்குத் தகுதியற்றதாகவும் உள்ளன. வரும் ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே மாரியம்மன் கோவில் கொடியேற்றம் நடைபெறவிருக்கிறது.
அதனைத் தொடர்ந்து பொங்கல் திருவிழா, கயிறுகுத்து திருவிழாக்களெல்லாம் வரவிருக்கின்றன. அதற்கடுத்து சித்திரைத் திருவிழாவும் வருகிறது. வைகாசி மாதம் சிவன் கோவில் தேரோட்டமும் நடைபெறும். அதனால் பல டன்கள் எடையுள்ள கோவில் தேர் நான்கு ரத வீதிகளிலும் உலா வருவதற்கு ஏற்ப புதிய தார்ச்சாலையை போர்க்கால அடிப்படையில் அமைத்துத் தரவேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.