கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள கொல்லத்தங்குறிச்சியை சேர்ந்தவர் வினோத்குமார் (27). இவரும் பெண்ணாடம் அருகேயுள்ள மாளிகை கோட்டம் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி மகள் ஆர்த்தி (23) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ரித்திகா என்ற குழந்தை உள்ளது.
இவர்கள் தற்போது விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகேயுள்ள சரோஜினி நாயுடு நகரில் உள்ள ஒரு காம்ப்ளக்ஸில் வாடகைக்கு குடியிருந்து கொண்டு வினோத்குமார் விருத்தாசலத்திலிருந்து திட்டக்குடி செல்லும் ஒரு தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வந்துள்ளார்.
தற்போது ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதமாக போக்குவரத்து முழுவதும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், வினோத்குமார் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை மீண்டும் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக ஆர்த்தி, கணவர் வினோத்குமாரை ஒரு அறையில் உள்ளே வைத்து பூட்டி விட்டு ஹாலில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து வெளியில் என்ன நடக்கிறது என தெரியாமல் இருந்த வினோத்குமார் ஆர்த்தியின் தந்தைக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அதையடுத்து ஆர்த்தியின் தந்தை ராமமூர்த்தி மற்றும் அவரது உறவினர்கள் வந்து வீட்டை திறந்து பார்த்தபோது திறக்க முடியாமல் வீட்டின் உள்கதவு தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் உள்ளிட்ட போலீசார் மூடியிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஆர்த்தி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். அதன் பின் ஆர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மற்றொரு அறையில் வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்த தாழ்ப்பாளை திறந்து உள்ளே அறையில் இருந்த வினோத்குமாரை மீட்டு விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இதனிடையே ஆர்த்தியை வினோத்குமார்தான் அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாகவும், ஆர்த்தியின் உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்கள் உள்ளதாகவும், அதனை மறைப்பதற்கு வினோத்குமார் முயற்சிப்பதாகவும் கூறி ஆர்த்தியின் தந்தை ராமமூர்த்தி மற்றும் அவரது உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டனர்.
தொடர்ந்து 'இது திட்டமிட்டு நடந்த கொலை. வினோத்குமார் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு என் மகளை கொன்று விட்டார். எங்கள் மகள் சாவில் மர்மம் உள்ளதால தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என கோரிக்கை வைத்து போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருமணமாகி 2 ஆண்டுகளில் பெண் தூக்கிட்டு இறந்ததால் சார் ஆட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டு, சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அரங்கநாதன், கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் உள்ளிட்ட வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் விசாரணை நடத்தினர்.