தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் எனும் நடைபயணத்தின் இரண்டாம் கட்டத்தை துவக்கி நடத்திவருகிறார். இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த 28ம் தேதி அவர் நடைப்பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது அண்ணாமலை, “இந்தியா முழுவதிலும் இருந்து, ஊட்டி நோக்கி மக்கள் பயணம் வருகிறார்கள். ஆனால், ஊட்டி மக்களுடைய பிரச்சனைகளைக் காலம் காலமாக இருக்க கூடிய அரசியல் கட்சிகள் தீர்க்கத் தவறி விட்டனர். ஆளுங்கட்சி சம்பாதிப்பதற்காக மட்டுமே திட்டங்கள் போடுகிறார்கள். சுற்றுலா பயணிகள் வாகனங்களுக்கு சரியான வாகன நிறுத்த வசதிகள் செய்யவில்லை. ஊட்டி நகராட்சியில் சொத்து வரி கட்டணம் மிக மிக அதிகம். இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும்.
நீலகிரி எம்பி ஆ.ராசா, நீலகிரியின் பிரச்சனைகளைப் பேசமாட்டார். தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பிரச்சனையைப் பேசமாட்டார். படுகா மக்கள் பிரச்சனைகளைப் பேசமாட்டார். மனித விலங்கு மோதல் குறித்துப் பேச மாட்டார். மின்சாரம் இல்லாம பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. அதைப் பத்தி பேசமாட்டார். ஆனால் பேசுவது அனைத்துமே, சனாதன தர்மத்திற்கும் இந்து தர்மத்திற்கும் எதிராக மட்டுமே. ஒரு பகுதி நேர பாராளுமன்ற உறுப்பினராக, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நீலகிரிக்கு சுற்றுலா பயணியாக வருகிறார். சனாதனம் என்பது தொழுநோய், இந்துக்கள் என்று சொன்னாலே விபச்சாரியின் மகன் இவைதான் ஆ.ராசா உதிர்த்த முத்துக்கள்.
வரும் 2024 பாராளுமன்ற தேர்தல் ராசாவை, நீலகிரி மக்கள் டெபாசிட் இழக்கச் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. நீலகிரியில் இருந்து பாரதிய ஜனதா கட்சியினுடைய பாராளுமன்ற உறுப்பினரை நீங்கள் அனுப்பி வைக்க வேண்டும். நமக்கென்று நம்முடைய பாராளுமன்ற உறுப்பினர் வரும்பொழுது இந்த வளர்ச்சி என்பது இன்னும் வேகப்படுத்தப்படும். வளர்ச்சித் திட்டங்கள் இரண்டு மடங்கு மூன்று மடங்காக செய்ய முடியும். தீர்க்க முடியாத பல பிரச்சனைகளைத் தீர்க்க முடியும்.
திராவிட முன்னேற்ற கழகம் எனும் தீய சக்தியை முழுமையாக தமிழகத்தில் இருந்து அடியோடு வேரோடு மண்ணோடு சாய்க்க வேண்டிய நேரம் இது. வரும் பாராளுமன்றத் தேர்தலில் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறை 400 எம்பிக்களுடன் ஆட்சி அமைக்கும்போது, தமிழகத்தில் இருந்து 39 எம்பிக்கள் அனுப்பி வைப்போம் என்கிற நம்பிக்கை நமக்கிருக்கிறது. அதுவரை அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டுமென்று அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தப் பயணத்தின் போது தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையுடன் போக்குவரத்து சீரமைப்பு காவலர் கணேசன் என்பவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனை அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும், இந்தப் புகைப்படம் வேகமாக பரவியது. இதனையடுத்து அரசுப் பணி விதிமுறைகளை மீறியதாகப் போக்குவரத்து காவலர் கணேசன், ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.