திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாச்சலூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த 5ஆம் வகுப்பு சிறுமி பள்ளிக்குச் சென்றிருந்த நிலையில், மதிய வேளையில் காணாமல்போன சிறுமி பள்ளிக்கு அருகில் உள்ள புதரில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சிறுமி கொலைக்கு நீதி வேண்டும் என பெற்றோர்கள் குழந்தையின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் உறுதியளித்ததைத் தொடர்ந்து உடலை பெற்றுக்கொண்ட பெற்றோர், உடலைத் தகனம் செய்துள்ளனர்.
இதுதொடர்பான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கோவையில் இதேபோல் 15 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு புதரில் மூட்டைக் கட்டி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள சிவானந்தபுரம் யமுனா நகரில் தூய்மைப்பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது புதர் ஒன்றில் மூட்டை ஒன்று கிடந்துள்ளது. அதிலிருந்து துர்நாற்றம் வீச அந்த மூட்டையைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் ஒரு சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சரவணம்பட்டி காவல்துறையினர், விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டனர். உயிரிழந்தது 15 வயது சிறுமி என்பதையும், அச்சிறுமியைக் கடந்த 11ஆம் தேதி காணவில்லை என கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர் என்பதும் உறுதி செய்யப்பட்டது. தற்போது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதுவும் சிறுமியின் வீட்டின் அருகிலேயே புதர் ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானலில் சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், அதேபோல் கோவையிலும் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.