ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பேசிக்கொண்டதற்காக வங்கிப் பணியாளர்கள் மீது வழக்குத் தொடர்ந்து அலைக்கழித்த ஆட்சியாளர்கள், இப்போது வன்முறையைத் தூண்டும் பேச்சுக்கு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது ஏன்? என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு கண்டனம்: தூண்டியோரை கைது செய்க! என்ற தலைப்பில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் தந்தை பெரியாரின் உருவச்சிலைகளை அகற்றுவோம் என்ற எச். இராஜாவின் வெறுப்புப் பிரச்சாரத்திற்கு பிறகு வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ள தந்தைப் பெரியாரின் சிலையை சில சமூக விரோதிகள் சேதப்படுத்தியுள்ளனர். தமிழகத்தை பதற்றத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செய்யப்ப்பட்டுள்ள இந்த விஷமத்தனமான செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக பாரதிய ஜனதாக் கட்சி நிர்வாகி முத்துராமன் என்பவரும், அவரது உறவினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியுமான பிரான்சிஸ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் அவர்களைத் தூண்டிய எச்.இராஜா மீது இதுவரை வழக்கும் பதிவு செய்யப்படவில்லை; நடவடிக்கையும் செய்யப்படவில்லை. ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பேசிக்கொண்டதற்காக வங்கிப் பணியாளர்கள் மீது வழக்குத் தொடர்ந்து அலைக்கழித்த ஆட்சியாளர்கள், இப்போது வன்முறையைத் தூண்டும் பேச்சுக்கு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது ஏன்?
தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா, பொதுச்செயலாளர் முரளிதரராவ் ஆகியோர் கண்டித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. அவர்களின் நிலைப்பாடு உண்மையானது என்றால், சிலை சேதத்திற்கு தூண்டுதலாக இருந்த எச்.ராஜா மீது பாரதிய ஜனதா தலைமை நடவடிக்கை எடுக்காதது ஏன்? பெரியார் சிலை அகற்றம் தொடர்பான பதிவை தாம் போடவில்லை என்றும், தமக்கு தெரியாமல் அட்மின் போட்டுவிட்டதாகவும் கூறி ராஜா தப்பிக்கப் பார்ப்பது சரியல்ல. இராஜாவின் பொறுப்பற்ற கருத்தால் தமிழகம் இன்று போராட்டக்களமாகியிருக்கிறது. பெரியார் சிலையை சேதப்படுத்த தூண்டிய எச்.இராஜாவை தமிழக காவல்துறை கைது செய்ய வேண்டும்; தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்க முயன்ற எச். இராஜா மீது பாரதிய ஜனதாக் கட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.