Skip to main content

பென்னாகரம்: விநாயகர் சிலை ஏற்றிச்சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து; 22 பேர் பலத்த காயம்!

Published on 15/09/2018 | Edited on 15/09/2018

 

ACCIDENT

 

தர்மபுரி அருகே, ஒகேனக்கல் ஆற்றில் கரைப்பதற்காக விநாயகர் சிலையை ஏற்றிச்சென்ற வாகனம் திடீரென்று நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 22 பேர் பலத்த காயம் அடைந்தனர்.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள காட்டாம்பட்டியை சேர்ந்த கரியன் மகன் வேலு. நான்கு நாள்களுக்கு முன்பு, புதிதாக டாடா ஏஸ் வாகனத்தை வாங்கினார். விநாயகர் சதுர்த்தியையொட்டி, சொந்த ஊரில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து இருந்தார். வாகனம் வாங்கியதற்காக 'சென்டிமென்ட்' கருதி, விநாயகர் சிலையை தன்னுடைய வாகனத்திலேயே ஏற்றிக்கொண்டு, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரைப்பதற்காக சென்று கொண்டிருந்தார். உறவினர்கள், நண்பர்கள் என 22 பேர் அந்த வாகனத்தில் சென்றனர்.

 


பென்னாகரத்தை அடுத்த பருவதனஹள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, வாகனம் திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. 'திடீர் பிரேக்' போட்டதில் அந்த வாகனம், சாலையோரத்தில் தலைகீழாக நிலைகுத்தி நின்றது. இந்த விபத்தில் வாகனத்தில் சென்ற அனைவரும் காயம் அடைந்தனர். பலத்த காயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி, சரவணன், மணி, பழனியம்மாள் ஆகிய நான்கு பேரை அப்பகுதி மக்கள் மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்த பென்னாகரம் போலீசார், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து, காயம் அடைந்த மற்ற அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காயம் அடைந்த மற்றவர்களின் பெயர் விவரங்கள் தெரியவில்லை.

 


வாகனம் நிலைகுத்தி நின்றதில், ஆற்றில் கரைக்கப்பட வேண்டிய விநாயகர் சிலை சுக்கல் சுக்கலாக நொறுங்கியது. பக்தர்கள் சாப்பிடுவதற்காக கொண்டு சென்ற உணவு பொருள்களும் சாலையோரம் சிதறின. பென்னாகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்