சிதம்பரம் கோட்டத்தில் உள்ள காவல்துறையினர் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனை கூட்டம் டி.எஸ்.பி. லா மேக் தலைமையில் நடைபெற்றது. இதில் காவல்துறை அதிகாரிகள், இந்து அமைப்பினர், விநாயகர் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது டி.எஸ்.பி. லா மேக் பேசும்போது, கரோனா தொற்று காரணமாகவும் பொதுமக்கள் நலன் கருதியும் கடந்த ஆண்டுகளில் நடத்தியதுபோல் தற்போது நடத்தக்கூடாது. விநாயகர் சதுர்த்தியின்போது பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அதற்கு அனுமதி இல்லை. எனவே பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி என்று அவரவர் வீட்டிலேயே விநாயகர் வழிபாடு நடத்திக் கொள்ள வேண்டும் என்று விரிவாக எடுத்துக்கூறினார் டிஎஸ்பி.
அப்போது கூட்டத்தில் கலந்துகொண்ட இந்து அமைப்பினர் சிலர் உங்கள் அறிவுரையை ஏற்க முடியாது. நாங்கள் விநாயகர் சிலையை பொது இடங்களில் வைத்து வழிபடுவோம் என்று பேசினர், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்து அமர வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு நடந்த கூட்டத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவது சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கு அனுமதி இல்லை. சிறிய விநாயகர் கோவில்களில் மட்டும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து வழிபாடு செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் முருகேசன் தேவேந்திரன் பாண்டிச்செல்வி அமுதா ராபின்சன் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ் முருகன் மற்றும் இந்து அமைப்பின் நிர்வாகிகள் விநாயகர் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.