விழுப்புரம் மாவட்டம், வேட்டவலம் அருகே உள்ளது வீரபாண்டி கிராமம். இந்த ஊரில் கடந்த நான்கு வருடங்களாக டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடைக்கு, சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மது அருந்த வருகிறார்கள். அவர்கள், மது குடித்துவிட்டு போதையில் பெண்களிடம் அத்துமீறுவது, சாலையோரத்தில் விழுந்து கிடப்பது, அப்பகுதி மக்களிடம் வீன் தகராறில் ஈடுபடுவது என அவ்வப்போது நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று மது அருந்திவிட்டு போதையில் ஆட்டோவை ஓட்டியுள்ளார் ஒரு நபர். அந்த ஆட்டோ, அங்கும் இங்கும் அலைபாய்ந்தபடி சென்றது. அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது, ஆட்டோ மோதியது. இதில் சந்தோஷ் என்பவர் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார். இதையடுத்து, இறந்த சந்தோஷ் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அந்த அரசு மதுபான கடையினால்தான் இப்பகுதியில் பிரச்சனைகளும் தகராறுகளும் விபத்துக்களும் ஏற்படுவதாகக் கூறி, அந்த மதுபான கடையை அகற்றக்கோரி திருக்கோவிலூர் வேட்டவலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கண்டாச்சிபுரம் தாசில்தார் கார்த்திகேயன் அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளர் ராம்தாஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள் டாஸ்மார்க் கடை உயரதிகாரிகளிடம் இதுகுறித்து பேசி டாஸ்மாக் கடையை அகற்றுவது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததனர். அதனால், அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த போராட்டத்தினால் திருக்கோவிலூர் வேட்டவலம் சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் வாக்குறுதி அளித்தபடி விரைவில் டாஸ்மாக் கடையை அகற்றப்பட வேண்டும். இல்லையில் மீண்டும் டாஸ்மாக் கடையை அகற்றும் வரை போராட்டம் நடத்துவோம் என்று கூறுகிறார்கள் அப்பகுதி மக்கள்.