விழுப்புரம் அருகில் உள்ள சாலாமேடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(49). இவர் மடப்பட்டு மின்சார வாரிய அலுவலகத்தில் லைன் மேன் பிரிவில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 8ஆம் தேதி முதல் வெங்கடேசன் வீட்டுக்கு வராத நிலையில் அவரது மனைவி ராஜராஜேஸ்வரி மற்றும் உறவினர்கள் வெங்கடேசனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். வெங்கடேசன் கிடைக்கவில்லை என்பதால் அவரது மனைவி ராஜ ராஜேஸ்வரி விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வெங்கடேசன் காணாமல் போனது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று(27.15.2022) காலை 11 மணி அளவில் விழுப்புரம் நகரை ஒட்டிய சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஜானகிபுரம் பகுதியின் பின்புறம் சாலையோர முட்புதரில் அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விழுப்புரம் தாலுகா போலீசார் அந்த உடலை மீட்டனர். அப்போது இந்த உடல் காணாமல் போன வெங்கடேசன் ஆக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரது மனைவி ராஜ ராஜேஸ்வரியை உடனடியாக வரவழைத்து அடையாளம் காட்டச் சொன்ன நிலையில் அது வெங்கடேசன் உடல்தான் என்பதை அவர் மனைவி உறுதி செய்துள்ளார்.
இதையடுத்து வெங்கடேசன் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனவே வெங்கடேசன் முட்புதரில் பிணமாக வீசப்பட்ட சம்பவம் எப்படி நடந்தது வெங்கடேசனை யாராவது கொலை செய்து இங்கு வீசி விட்டு சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சார வாரிய ஊழியர் முட்புதரில் பிணமாக கிடந்த சம்பவம் விழுப்புரம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.