Skip to main content

கோயில் மணியடித்துப் போராடிய இளம்பெண்கள்! ஃபோனில் பேசிய வட்டாட்சியர்! விழுப்புரத்தில் சுவாரசியம்

Published on 04/10/2021 | Edited on 04/10/2021

 

Viluppuram komoor village girl struggle
                                                 மாதிரி படம் 

 

விழுப்புரம் மாவட்டம், காணை எனும் பகுதியின் அருகே உள்ளது கோனூர் என்ற கிராமம். இந்தக் கிராமத்தில் ஆதிதிராவிட மக்கள் வசிப்பதற்காக 3 சென்ட் இடத்தில் அரசு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி அங்கு கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி குப்பம்மாள் தம்பதிக்கு ஒரு வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. இத்தம்பதியினர் கடந்த 2000ஆம் ஆண்டு அந்த வீட்டை அதே பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் மனைவி அம்பிகா என்பவரது பெயருக்கு விலைக்கு விற்பதாக 8,500 ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு கிராம மக்கள் முன்னிலையில் ஒப்பந்தப் பத்திரம் மட்டும் எழுதிக் கொடுத்துள்ளனர். 

 

அப்போது கிரயம் கொடுக்கப்படவில்லை. காரணம் அரசு இலவசமாக ஒதுக்கிக் கொடுத்த வீடுகளை 30 ஆண்டுகளுக்குப் பின்னரே அடுத்தவர் பெயருக்கு கிரயம் எழுதிக் கொடுக்க முடியும். அதற்கு முன்னதாக கிரயம் செய்து கொடுத்தால் அது செல்லாது. அதன் காரணமாக ஒப்பந்தப் பத்திரம் மட்டும் அம்பிகா பெயருக்கு எழுதிக் கொடுத்துள்ளனர். அப்படி எழுதிக் கொடுக்கப்பட்ட அந்த வீட்டில், புருஷோத்தமன், அவரது மனைவி அம்பிகா மற்றும் அவர்களது நான்கு பெண் பிள்ளைகள் வசித்துவந்தனர். 

 

இந்த நிலையில், புருஷோத்தமன் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது மனைவி அம்பிகா, 20 நாட்களுக்கு முன்பு இறந்துபோனார். தற்போது திருமணமாகாத அவர்களது நான்கு பெண் பிள்ளைகளும் அந்த வீட்டில் வசித்துவருகின்றனர். இவர்கள் நால்வரும், தற்போது 30 ஆண்டுகள் கடந்துவிட்டதால், தனது தாய்க்கு ஊரார் முன்னிலையில் ஒப்பந்தப் பத்திரம் எழுதிக் கொடுத்தபடி, எங்களுக்கு வீட்டை கிரயம் செய்து கொடுக்க வேண்டும் என்று கிருஷ்ணனிடம் கேட்டுள்ளனர். அதற்கு கிருஷ்ணன், “உங்களுக்கு கிரயம் எழுதித் தர முடியாது. 30 ஆண்டுகளுக்கு முன்பு உங்களது தாய் தந்தையரிடம் நாங்கள் வாங்கிய 8,500 ரூபாய் பணத்தை வேண்டுமானால் இப்போது கொடுத்துவிடுகிறோம். வீட்டை எழுதித் தர முடியாது” என்று கறாராகத் தெரிவித்துள்ளார். 

 

இதைக் கேட்டு மன வேதனை அடைந்த அந்த நான்கு பெண்களும் நேற்று முன்தினம் (02.10.2021) இரவு 7 மணி அளவில் அப்பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலுக்குச் சென்று தங்களுக்கு நியாயம் வழங்கக் கோரி ஒருவர் மாறி ஒருவர் என நான்கு மணி நேரம் கோவில் மணியை மாறி மாறி அடித்து ஒலி எழுப்பிக்கொண்டிருந்தனர். கோயில் மணியோசை விடாமல் அடிக்கும் சத்தம் கேட்டு ஊர் மக்கள் திரண்டு கோயிலுக்குச் சென்று பார்த்தபோது, நான்கு பெண்களும் கோயில் மணியை விடாமல்  அடித்ததைப் பார்த்தனர். அதனைக் கண்ட ஊர் மக்கள், அதுகுறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். 

 

உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார், கோயில் மணி அடித்துக்கொண்டிருந்த சகோதரிகள் நான்கு பேரிடமும், காவல் நிலையம் வந்து புகார் அளிக்குமாறும் அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால், அந்தப் பெண்கள், “நாங்கள் காவல் நிலையம் வர மாட்டோம். அதிகாரிகள் ஊருக்கு வந்து எங்கள் பிரச்சனையைத் தீர்த்து வைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர். இதன் பிறகு விழுப்புரம் வட்டாட்சியர் வெங்கடசுப்ரமணியன், காவல்துறை மூலம் அந்தப் பெண்களிடம் ஃபோனில் தொடர்புகொண்டு விவரம் கேட்டுள்ளார். அதன்பிறகு கிருஷ்ணன் எழுதிக் கொடுத்த ஒப்பந்தப் பத்திரத்தை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து வந்து அதை வைத்து மனு கொடுத்த பிறகு அந்த சகோதரிகள் பெயருக்கு அந்த வீட்டை, பட்டா மாற்றம் செய்து தருவதாக வட்டாட்சியர் உறுதியளித்துள்ளார். அதன் பிறகு அந்த நான்கு பெண்களும் கோயில் மணி அடிப்பதை நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றனர். தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுமாறு நூதன போராட்டம் நடத்திய 4 சகோதரிகளின் வித்தியாசமான போராட்டம் சுற்றுப்புற கிராம மக்களிடம் அதிசயமாகப் பேசப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்