தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பரப்புரைகளை அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன. இதற்கு முன்பே 'தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுடன் தி.மு.க தலைவர் ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில், இன்று திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக உரையாற்றிய மு.க.ஸ்டாலின், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில், அரசு வேறு வழியின்றி நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். மேலும் பேசிய அவர், ''அமைச்சர் வேலுமணி மீது, சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் ஊழல் தொடர்பாக 2018 -ஆம் ஆண்டு, 'அறப்போர் இயக்கம்' லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கொடுத்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் 2017-ஆம் துணை முதல்வர் மீது சொத்துக்குவிப்பு புகாரை அறப்போர் இயக்கம் வைத்தது, அதற்கும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதுதான் தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை செயலாற்றும் லட்சணம். அமைச்சர்கள், முதல்வர் குறித்த புகாரை விசாரிக்காமல், அலுவலர்கள், அதிகாரிகளை மட்டும் விசாரிப்பீர்களா? கைது செய்வீர்களா? இது என்ன நியாயம். தேர்தல் வருகிறது என்பதற்காக நடிக்கிறீர்களா?
மினி கிளினிக் என்று புதியதாக நாடகம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்கள். எதோ பெரிய சாதனை செய்த மாதிரி பெருமையில் வலம் வருகிறார் எடப்பாடி பழனிசாமி. 2,000 சிறு மருத்துவமனைகளை திறந்ததாகக் கூறுகிறார்கள். அப்படி இருந்தால் கண்டிப்பாகப் பாராட்டுவேன். ஆனால் கவுண்டமணி செந்தில் வாழைப்பழக் காமெடி போல இருக்கிறது எடப்பாடி பழனிசாமியின் மினி மருத்துவமனை. எப்படி என்றால், 2,000 புதிய மருத்துவமனைகளை உருவாகியுள்ளதாக முதல்வர் கூறுகிறார். அப்படியானால் எத்தனை புதிய மருத்துவர்களை, செவிலியர்களை வேலைக்கு எடுத்திருக்கிறீர்கள். எத்தனை மருத்துவமனைகளைப் புதியதாகக் கட்டியிருக்கிறீர்கள் என்று கேட்டால் எதுவும் இல்லை. ஏற்கனவே உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களையும், துணைச் சுகாதார மருத்துவமனையின் மருத்துவர்களையும் அமரவைத்து புதிய மருத்துவமனை என்று காட்டுகிறார்கள். இன்னொரு வாழைப்பழம் எங்கே என்று கவுண்டமணி கேட்பாரு. அதேதான் இது என செந்தில் சொல்லுவாரு. அதுபோல் ஆரம்ப சுகாதார மருத்துவர்களை மினி கிளினிக்கிற்கு அனுப்பிவிட்டு இதுதான் அது என்கிறார்கள்'' என்றார்.