விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது கரடி பாக்கம் எரளூர். இந்த கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு அதிகாரிகள் இடம் தேர்வுசெய்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். இந்தத் தகவலை அறிந்த கிராம மக்கள், இந்த டாஸ்மாக் கடை தங்கள் ஊரில் திறக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை மேற்படி கிராமத்தில் டாஸ்மாக் கடை திறப்பதற்காக மது பாட்டில்களுடன் அதிகாரிகள் அங்கு வந்தனர்.
இதைக் கண்டு கோபம் அடைந்த கிராம மக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதித்தனர். தகவலறிந்த திருவெண்ணைநல்லூர் பொறுப்பு இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால், கிராம மக்கள் டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது என்று உறுதியாகப் போராட்டத்தில் குதித்தனர். இதனால், போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமை அறிந்த டாஸ்மாக் மேலாளர் முருகன், அங்கே கடை திறக்க வேண்டாம் என்று உத்தரவிட்டதையடுத்து டாஸ்மாக் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். தங்கள் போராட்டம் வெற்றி பெற்றதையடுத்து பொதுமக்களும் சந்தோஷத்துடன் கலைந்துசென்றனர்.