விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் டவுனில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி விடுமுறைக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. கல்லூரியில் 60 கௌரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று காலை பத்து மணிக்கு கல்லூரிக்கு பணிபுரிய வந்த விரிவுரையாளர் அனைவரும், திடீரென கல்லூரி வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தத் தகவல் அறிந்து கல்லூரிக்கு விரைந்து வந்த திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் போராட்டம் நடத்திய விரிவுரையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரிவுரையாளர்கள் தரப்பில் “2018_19 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள 41 உறுப்பு கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட கௌரவ விரிவுரையாளர்களை பணியிலிருந்து நீக்கக் கூடாது என அரசு ஆணை பிறபித்துள்ளது.
இந்நிலையில், தற்போது கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்பட்டுவருகின்றன. இதில், ஏற்கனவே இருந்த கௌரவ விரிவுரையாளர்கள் பணி செய்து வருகின்றனர். ஆனால் திருவெண்ணைநல்லூர் அரசு கலை அறிவியல் கல்லூரி நிர்வாகம் மட்டும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நேர்முகத் தேர்வு நடத்தி அதன் பிறகு தான் மீண்டும் கௌரவ விரிவுரையாளர்கள் அனைவரும் பணியில் சேர்க்கப்படுவர் என்று தெரிவிக்கின்றனர். அதுவரை பணிக்கு வருபவர்கள் வருகை பதிவேட்டில் கையொப்பமிட வேண்டாம் என்று கூறுகிறார்கள்.
நாங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்தக் கல்லூரியில் பணிபுரிந்து வருகின்றோம். திடீரென இதுபோன்று கூறுவதால் எங்கள் முன்னுரிமை பறிக்கப்பட்டு நாங்கள் வருங்காலத்தில் வேலை இழக்கக்கூடும். கல்லூரிக்கு நிரந்தர முதல்வர் நியமிக்கப்பட வேண்டும். தற்போது பொறுப்பில் உள்ள கல்லூரி முதல்வரால் சரியாக செயல்பட முடியவில்லை. எங்களுக்கு தேர்வு வேண்டாம்” என்று கூறினார்கள்.
இது குறித்து தொகுதி எம்.எல்.ஏவும் உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடிக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின் பேரில் கௌரவ விரிவுரையாளர்கள் பணிப் பதிவேட்டில் கையொப்பமிட்டுவிட்டு போராட்டத்தை கைவிட்டு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.