கண்ணுக்குத்தெரியாத கரோனா வைரஸ் மனித சமூகத்திற்கும், நவீன அறிவியலுக்கும் சவாலாக அமைந்துள்ளது. தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் உலகநாடுகள் திணறி வருகின்றன. மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் தொடர்ந்து தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் பெரிய அளவில் உள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக ஊரடங்கை நீட்டித்து மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இதற்கிடையில் கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுப்பிடித்துவிட்டதாக சென்னை, ஜெய்நகர், கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனையின் சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் என்பவர் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகை மூலம் தெரிவித்து வந்தார்.
இவ்வாறு வதந்திகளை பரப்பி வரும் அவர், போலி மருத்துவர் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை இயக்குநர், சென்னை காவல்துறையிடம் புகாரளித்திருந்தார். இதையடுத்து சித்த மருத்துவர் தணிகாசலம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.