விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ளது இளங்காடு. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் துரை. இவரது மகன் 27 வயது ராஜதுரை. இவர் சென்னை வடபழனி அருகே உள்ள பேட்டரி கடையில் வேலை செய்துவருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான மாலா (37) என்பவர், வேலைநிமித்தமாக, ராஜதுரை வேலை செய்துவந்த கடைவழியாக அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, ராஜதுரைக்கும் மாலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களின் பழக்கம் தகாத உறவாக மாறியுள்ளது. இந்த நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, இருவரும் அவரவர் வீட்டை விட்டு வெளியேறி, ராஜதுரையின் சொந்த ஊரான இளங்காடு கிராமத்திற்கு வந்துவிட்டனர். இருவரும் கணவன் மனைவி போல குடும்பம் நடத்தி வந்துள்ளனர். குடும்ப வருமானத்திற்காக வளவனூர் அருகில் உள்ள செங்கல் சூளையில், இருவரும் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி பள்ளிகொண்டான்புறம் என்ற ஊர் அருகே இருவரும் பூச்சி மருந்தைக் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். அவ்வழியாகச் சென்றவர்கள் இவர்களின் நிலையைப் பார்த்துவிட்டு வளவனூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்ற போலீசார், இருவரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டுசென்று சேர்த்தனர். இதில், மாலா மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ராஜதுரைமட்டும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இவர்கள் இருவரும் தற்கொலைக்கு முயன்ற காரணம் என்ன கந்துவட்டிக் கொடுமையா? குடும்பப் பிரச்சனையா? வேறு ஏதேனும் காரணமா எனப் பல்வேறு கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் வளவனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.