விழுப்புரம் அருகே வானூர் காவல் நிலைய எல்லையில் உள்ள திருவக்கரை - செங்கமேடு சாலையில் நேற்று முன்தினம் காலை இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களைப் பின் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற ஏழு பேர் கொண்ட கும்பல் அந்த இருவரையும் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் அவர்கள் இருவரும் உயிர் தப்பிக்க முயன்று ஓடியுள்ளனர். சுமார் ஒரு கிலோமீட்டர் இருவரையும் துரத்திச் சென்று சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே, இருவரும் உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் உயிரிழந்ததை உறுதி செய்து கொண்ட அந்த கும்பல் சாவகாசமாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த வானூர் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், புதுச்சேரி மாநிலம் பிள்ளையார் குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அருண் (வயது 34). இவர் வில்லியனூர் பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட இரட்டை கொலை வழக்கில் முதல் குற்றவாளி என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இன்னொருவர் அவரது கூட்டாளி வில்லியனூர் கோர்க்காடு பகுதி சேர்ந்த அன்பரசன் (வயது 32) என்பதும் தெரியவந்தது.
நண்பர்களான இவர்கள் இருவரும் இணை பிரியாது இருந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததாக மயிலம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்த இவர்கள் இருவரும் தினமும் மயிலம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்துள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பல் வழிமறித்து இருவரையும் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
இது குறித்து வானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து அறிந்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கசான் சாய், கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி உள்ளனர். கொலையாளிகளைக் கைது செய்து விசாரணை நடத்தினால் தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என்கிறார்கள் போலீஸ் தரப்பில் இருந்து. ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வானூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.