Skip to main content

வறுமைகோடு பட்டியலில் முறைகேடு; மறுகணக்கெடுப்பு நடத்த மார்க்சிஸ்ட் கட்சி சார் ஆட்சியரிடன் மனு!!

Published on 18/02/2019 | Edited on 18/02/2019

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு தலைமையில் பரங்கிப்பேட்டை, பெரிய மதகு, அகரம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மனு ஒன்று அளித்தனர்.

 

 Poverty list scandal; Marxist Party seeks to reconstitute

 

தமிழக அரசு வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக ரூ 2000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வறுமைக்கோடு பட்டியல் அடிப்படையில் இப்பணம் வட்டார வளர்ச்சி அலுவலர்  மற்றும் அலுவலகம் கண்காணிப்பின்கீழ் ஊராட்சி அலுவலக உதவியாளர்கள் மூலம் செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கு எடுக்கும்போதே அரசின் புள்ளிவிவரப்படி வறுமை குறைவாக இருப்பதைக் காட்ட மோசடிகள் நடைபெற்றதை அப்போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சுட்டிகாட்டியுள்ளது.

 

 

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள பரங்கிப்பேட்டை பேரூராட்சி உள்ளிட்ட பல கிராமங்களில் உண்மையான ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு இந்த நிதி கிடைக்க எந்த ஏற்பாடும் இல்லை. தகுதியற்றவர்களை வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளதாக கணக்கெடுப்பு நடத்தி மோசடி நடைபெற்றுள்ளது. மறு கணக்கெடுப்பை நடத்தி வறுமையில் வாழும் மக்களுக்கு அரசின் நிதி முறையாக சென்றடைய ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் அருள்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் வேல்முருகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் விஜய், அசன் முகமது மன்சூர், சமூக ஆர்வலர்கள் கவுஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர்கள் பாலமுருகன், பாண்டியன் உள்ளிட்ட கிராமபொது மக்கள் உடன் இருந்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சி.பி.எம். வேட்பாளர்கள் அறிவிப்பு

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
CPM Announcement of candidates

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. நாளை (16.03.2024) தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தி.மு.க. கூட்டணி சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான 40 மக்களவைத் தொகுதிகளுக்கான தொகுதிப் பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அதன்படி தி.மு.க. 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி புதுச்சேரியின் ஒரு மக்களவை தொகுதி உட்பட 10  தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும், வி.சி.க. 2 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, கொ.ம.தே.க., ம.தி.மு.க. ஆகிய மூன்று கட்சிகளும் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட உள்ளன. அதே சமயம் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகள் தி.மு.க. கூட்டணியில்  ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்நிலையில், மதுரை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு. வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார். திண்டுக்கல் தொகுதியில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Next Story

“நடப்பாண்டும் தமிழ் கட்டாயப் பாடம் இல்லை; அரசின் அலட்சியமே காரணம்” - ராமதாஸ் கண்டனம்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Ramadas has condemned the negligence of the Tamil Nadu government as the reason

“உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து, அடுத்த ஆண்டு முதல் தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 26ஆம் நாள் தொடங்கவிருக்கும் நிலையில்,  நடப்பாண்டிலும் தமிழ் கட்டாயப்பாடம் இல்லை; மொழிச்சிறுபான்மையினர் நடப்பாண்டில் அவர்களின் தாய்மொழிப் பாடத்தில் தேர்வு எழுதலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடமாக்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டு 18 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், இன்னும் அந்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாததற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணமாகும்.

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை இது தொடர்பாக பிறப்பித்திருக்கும் அரசாணையில், ‘‘சில  மொழிச்சிறுபான்மை பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமிக்கப்படாததால், நடப்பாண்டில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ் மொழிப் பாடத் தேர்வை எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது; மொழி சிறுபான்மையினர் பள்ளிகளில் உள்ள அனைத்து தமிழாசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும் நிலையில் சிறுபான்மை மொழி பயிலும் மாணவர்களுக்கு 2025&இ-ல் நடைபெறவுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழி பாடத்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு கோரமாட்டோம் என்று அந்தப்பள்ளிகள் உறுதி அளித்துள்ளன’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

தமிழ்நாட்டில் மட்டும் தான் தமிழ் மொழியை ஒரு பாடமாக படிக்காமல் பட்டப்படிப்பைக் கூட நிறைவு செய்ய முடியும் என்ற நிலை நிலவுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே, பா.ம.க. கொடுத்த அழுத்தத்தின் பயனாக மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாக்கும் சட்டம் 09.06.2006-ஆம் நாள் சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

2006 ஆ-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஓவ்வொரு வகுப்புக்கு நீட்டிக்கப் பட்டு பத்தாவது ஆண்டில் தான் பத்தாம் வகுப்புக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு வகுப்புக்கு தமிழ்ப் பாடம் நீட்டிக்கப்படும் போது அந்த வகுப்பில் தமிழ் கற்பிக்கப்பட்டதற்கான சான்றிதழை பள்ளிகளின் நிர்வாகங்கள் அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். அது கட்டாயமாகும்.

அதன்படி முந்தைய 9 ஆண்டுகளும் தங்களது பள்ளி மாணவர்களுக்கு தமிழ் பாடத்தைக் கற்றுக் கொடுத்ததாக அரசிடம் சான்றிதழ் வழங்கிய தனியார் பள்ளிகள், பத்தாவது ஆண்டில் மட்டும் சரியான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் குழந்தைகளுக்கு தமிழ்ப் பாடத்தை கற்பிக்க முடியவில்லை என்று கூறி விலக்கு கோரின. முந்தைய 9 ஆண்டுகளில் தமிழைக் கற்பிக்க ஏற்படுத்தப்பட்டிருந்த கட்டமைப்புகள் பத்தாம் ஆண்டில் மட்டும் மாயமானது எப்படி? என்ற வினாவை அரசு எழுப்பியிருக்க வேண்டும். ஆனால், அந்த வினாவை தமிழக அரசு எழுப்பத் தவறிவிட்டது.

இப்போதும் கூட தமிழ் கட்டாயப் பாட சட்டம் இயற்றப்பட்டு 18 ஆண்டுகள் ஆகியும் தமிழாசிரியர்களை நியமிக்காதது ஏன்? என்று அந்த பள்ளி நிர்வாகங்களிடம் தமிழக அரசு வினா எழுப்பியிருக்க வேண்டும். ஆனால், எந்த வினாவும் எழுப்பாமல், தமிழ் பாடத் தேர்வை எழுதுவதிலிருந்து மேலும் ஓராண்டுக்கு தமிழக அரசு விலக்கு அளித்திருக்கிறது. தமிழைக் கட்டாயப்பாடமாக்குவதில் அரசு காட்டும் ஆர்வம் இவ்வளவு தான்.

இன்னொரு பக்கம் தமிழ் கட்டாயப்பாடம் தொடர்பாக சட்டப் போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் கட்டாயப்பாடச் சட்டத்திற்கு எதிராக 2015-&16ம் ஆண்டில் மொழிச்சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  8 ஆண்டுகளுக்குப் பிறகு 2023 முதல் செயல்படுத்த ஆணையிட்டது. ஆனாலும், அதை மதிக்காத பள்ளிகள் உச்சநீதிமன்றத்திற்கு சென்றன. கடைசி நேரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததால் கடந்த ஆண்டு மட்டும் தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்திலிருந்து விலக்கு அளித்த உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூலையில் நீதிமன்றம் திறக்கப்பட்ட பின்னர் இவ்வழக்கை விசாரித்து தீர்ப்பளிப்பதாக அறிவித்தது.

ஆனால், ஜூலை மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரணைக்குக் கொண்டு வருவதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதியும் கடந்த திசம்பர் மாதம் ஓய்வு பெற்றும் சென்று விட்டார். அதன் விளைவு தான் நடப்பாண்டிலும் தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இனி இந்த வழக்கு  எப்போது விசாரணைக்கு வரும்? தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டம் எப்போது முதல் நடைமுறைக்கு வரும்? என்பதும் தெரியவில்லை. அன்னைத் தமிழ் அரியணை ஏற இன்னும் எவ்வளவு ஆண்டுகள் ஆகுமோ?

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ்நாட்டில் தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டம் கொண்டு வருவதற்கு விடுதலைக்குப் பிறகு 60 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அந்தச் சட்டம் இயற்றப்பட்டு 18 ஆண்டுகள் ஆகியும் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பது உண்மையாகவே தமிழர்கள் தலைகுனிய வேண்டிய ஒன்றாகும். இந்த அவலநிலை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். எனவே, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து, அடுத்த ஆண்டு முதல் தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.