Skip to main content

மர்மமான முறையில் உயிரிழந்த தாத்தா, பாட்டி; பேரன் கைது

Published on 18/04/2023 | Edited on 18/04/2023

 

villupuram pillur old couple incident grandson involved

 

விழுப்புரம் நகரத்தின் அருகே உள்ள பில்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலுவு (வயது 85). இவரது மனைவி மணி (வயது 65). இந்த தம்பதிகளுக்கு முருகன், செல்வம் மற்றும் அய்யனார் என மூன்று ஆண் பிள்ளைகளும், சாந்தி என்ற ஒரு பெண் பிள்ளையும் உண்டு. இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மேலும் இவர்களது மகன் முருகன் வடலூரிலும் செல்வம், அய்யனார் ஆகிய இருவரும் காடாம்புலியூரிலும் மகள் சாந்தி குறிஞ்சிப்பாடியிலும் அவரவர் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். வயதான தம்பதிகளான கலுவு - மணி இருவரும் பில்லூரில் உள்ள அவர்களுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

 

இந்த நிலையில், நேற்று முன்தினம் முன்னிரவு நேரத்தில் இவர்களது உறவினர் விஜயா என்ற பெண்மணி தம்பதிகளின் வீட்டுக்கு சென்று அவர்களைப் பார்த்து வருவதற்கு சென்றுள்ளார். அங்கு கலுவு - மணி தம்பதிகள் இருவரும் இறந்து கிடந்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். அவர்கள் உடனடியாக விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவம் நடந்த வீட்டிற்கு போலீசார் விரைந்து சென்றனர். இறந்து போன இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

வயதான தம்பதிகள் இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா? எப்படி இறந்தார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சம்பவம் நடந்த அன்று தம்பதிகளின் மகன் முருகன் என்பவரது மகன் அருள்சக்தி (வயது 19) மட்டும் அந்த வீட்டிற்கு வந்து சென்றதாக அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் அருள்சக்தியை தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவரை இன்று கைது செய்து பணத்திற்காக தாத்தா, பாட்டியை அவர் கொலை செய்தாரா என்ற கோணத்தில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரது உடற்கூராய்வு அறிக்கை வந்தவுடன் அவர்களது இறப்பு குறித்து மேலும் தகவல்கள் தெரிய வரும் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர். வயதான தம்பதிகளின் மர்ம மரணம் பில்லூர் கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்