விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு திருநகர் பகுதியில் பிரகாஷ் என்பவர் பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். அவரது அலுவலகத்தில் இருந்த பங்க் மேலாளர் சீனிவாசனை கடந்த 4ஆம் தேதி அசார் தலைமையிலான ரவுடி கும்பல் ஒன்று வெடிகுண்டு வீசி பட்டப்பகலில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவம் விழுப்புரம் மக்களை பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராபின்சன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து டவுன் டிஎஸ்பி சங்கர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆகிய இருவரிடமும் விழுப்புரம் மண்டல டிஐஜி சந்தோஷ்குமார் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஏற்கனவே நகரில் கள்ளத்தனமாக லாட்டரி சீட்டு விற்பனை கொடிகட்டி பறந்தது. அதனால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டது. இதே போன்ற குற்ற சம்பவங்கள் விழுப்புரம் நகரில் அதிகரித்து வருகின்றன. விழுப்புரம் அருகே கல்பட்டு என்ற ஊரின் அருகில் பெண்ணையாற்றில் தினசரி மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்ட செயல்களை எல்லாம் தடுத்து நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை மெத்தனமாக உள்ளது என்கிறார்கள் விழுப்புரம் நகர மக்கள்.
இதன் எதிரொலியாக டிஐஜி சந்தோஷ் குமார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். மாவட்டத்தில் காவல்துறை மற்றும் வருவாய் துறையில் பல மாவட்டங்களிலிருந்து இங்கே பணி மாறுதல் பெற்று பணிக்கு வந்தவர்கள் இங்கேயே சின்ன சின்ன பதவிகளில் இருந்து மேல்மட்ட அதிகாரிகள் வரை பதவி உயர்வு பெற்று இங்கேயே சொந்தமாக வீடு கட்டிக் கொள்ளும் சொத்துக்கள் வாங்கியும் செட்டில் ஆகி உள்ளனர். இப்படிப்பட்டவர்கள் சம்பாதிப்பது மட்டுமே குறியாக உள்ளனர். மக்களைப்பற்றி குற்றச் சம்பவங்கள் பற்றி அதைதடுப்பதற்கு சரியான நடவடிக்கை எடுப்பதில்லை.
எனவே மாவட்டம் முழுவதும் உள்ள இரண்டு துறை அதிகாரிகளை பல்லாண்டு காலம் மாவட்டத்திலேயே பணி செய்பவர்களை கணக்கெடுத்து அவர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாறுதல் செய்தால் போதும் இது போன்ற சம்பவங்கள் தடுக்கப்படும். புதிதாக பணிக்கு வருபவர்கள் விரைந்து சரியான நடவடிக்கை எடுப்பார்கள் என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. அரசும் மேல்மட்ட அதிகாரிகளும் இதை செய்து மாவட்டத்தில் அமைதி திரும்ப வழி செய்வார்களா? என்பது பெரிய கேள்வியாக உள்ளது.