Skip to main content

தாத்தா, பாட்டி கொலை; பேரனின் திடுக்கிடும் வாக்குமூலம்!

Published on 19/04/2023 | Edited on 19/04/2023

 

villupuram grandparents incident grand son shock statement

 

விழுப்புரம் நகரத்தின் அருகே உள்ள பில்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலுவு (வயது 85). இவரது மனைவி மணி (வயது 65). இந்த தம்பதிகளுக்கு முருகன், செல்வம் மற்றும் அய்யனார் என மூன்று ஆண் பிள்ளைகளும், சாந்தி என்ற ஒரு பெண் பிள்ளையும் உண்டு. இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மேலும் இவர்களது மகன் முருகன் வடலூரிலும் செல்வம், அய்யனார் ஆகிய இருவரும் காடாம்புலியூரிலும் மகள் சாந்தி குறிஞ்சிப்பாடியிலும் அவரவர் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். வயதான தம்பதிகளான கலுவு - மணி இருவரும் பில்லூரில் உள்ள அவர்களுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

 

இந்த நிலையில், கடந்த 16 ஆம் தேதி முன்னிரவு நேரத்தில் இவர்களது உறவினர் விஜயா என்ற பெண்மணி தம்பதிகளின் வீட்டுக்கு சென்று அவர்களைப் பார்த்து வருவதற்கு சென்றுள்ளார். அங்கு கலுவு - மணி தம்பதிகள் இருவரும் இறந்து கிடந்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். அவர்கள் உடனடியாக விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவம் நடந்த வீட்டிற்கு போலீசார் விரைந்து சென்றனர். இறந்து போன இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

வயதான தம்பதிகள் இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா? எப்படி இறந்தார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சம்பவம் நடந்த அன்று தம்பதிகளின் மகன் முருகன் என்பவரது மகன் அருள்சக்தி (வயது 19) மட்டும் அந்த வீட்டிற்கு வந்து சென்றதாக அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அருள் சக்தியை போலீசார் அருள் சக்தி தீவிரமாக தேடினர். மேலும் அவர் பயன்படுத்தி வந்த செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் கோயம்புத்தூர் பகுதியில் தலைமறைவாக இருந்த அருள்சக்தியை நேற்று கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்தனர். 

 

போலீசார் நடத்திய விசாரணையில் அருள்சக்தி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், "எனது தந்தை முருகன் காடாம்புலியூரில் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். அதில் நானும் வேலை செய்து வந்தேன். எனக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அடிக்கடி பில்லூரில் உள்ள தாத்தா, பாட்டி வீட்டுக்கு வந்து அவர்களிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு வாங்கிச் செல்வேன். அதன்படி சம்பவத்தன்று அவர்களிடம் சென்று பணம் கேட்டேன். அவர்கள் தர மறுத்ததால் தாத்தாவுக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்தது. ஆத்திரத்தில் தாத்தாவின் கழுத்தை நெரித்துக் கொன்றேன். அந்த சமயத்தில் பாட்டி தோட்டத்தில் இருந்து வீட்டுக்குள் வந்தார். அந்த காட்சியை பாட்டி பார்த்துவிட்டதால் அவர் இது குறித்து வெளியே சொல்லி விடுவார் என நினைத்து பாட்டியையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு கோவைக்கு தப்பிச் சென்று விட்டேன். இருப்பினும் போலீசார் என்னை தேடி கண்டுபிடித்து விட்டனர்" எனத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் கலுவு - மணி தம்பதிகளுக்கு சொந்தமான இடம், அதில் கட்டப்பட்டுள்ள ஒரு வீடு, இதுதவிர வேறு சொத்து எதுவும் இல்லை. அந்த வீட்டை தனது ஒரே மகள் சாந்தி பெயருக்கு எழுதிக் கொடுக்கும் எண்ணத்தில் அவர்கள் இருவரும் இருந்ததாகவும் அந்த வீட்டை தன் பெயருக்கு எழுதித் தருமாறு அருள்சக்தி அவ்வப்போது தாத்தா, பாட்டியை சந்தித்து மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. அத்தை சாந்தி பேருக்கு வீட்டை எழுதி வைத்து விடுவார்களோ என்ற காரணத்தினால் தாத்தா, பாட்டி இருவரையும் கொலை செய்ததாக அவர்களது உறவினர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. போலீசார் அருள்சக்தியிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பணத்துக்காக தாத்தா, பாட்டியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த பேரனின் செயல் பில்லூர் கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்