சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகே உள்ளது சிந்தாமணி. இந்த ஊரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி (இந்தியன் வங்கி) உள்ளது. இந்த வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் பிரியதர்ஷினி. வங்கியில் கேஷியராக வேலை பார்த்து வந்தவர் வளவனூரைச் சேர்ந்த முகேஷ் (வயது 38). இவர் கடந்த 25 ஆம் தேதி வழக்கம்போல் வங்கி பணிக்கு சென்றுள்ளார். அப்போது சுமார் 10.45 மணியளவில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி விட்டு அருகில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டு திரும்பி வருவதாக வங்கி மேலாளர் பிரியதர்ஷினியிடம் அனுமதி கேட்டு விட்டு புறப்பட்டு சென்றுள்ளார்.
முகேஷ் நீண்ட நேரமாகியும் வங்கிக்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த மேலாளர் சில ஊழியர்களை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று விசாரித்துள்ளார். அதன் பிறகு முகேஷ் அங்கு வரவே இல்லை என்பது தெரிய வந்தது. உடனே கேஷியர் முகேஷ் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார் மேலாளர். அவரது போன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது. பல மணி நேரம் முயற்சி செய்தும் முகேஷின் செல்போன் தொடர்பு கிடைக்கவில்லை. உடனே அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு முகேஷ் வீட்டுக்கு வந்துள்ளாரா என்று கேட்ட போது அவர் வீட்டுக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தேகம் அடைந்த மேலாளர் கேஷியர் அறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்துள்ளார். அதில் முகேஷ் கேஷியர் அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 44 லட்ச ரூபாய் பணக்கட்டுகளை ஒரு பையில் அள்ளி எடுத்துச் சென்றது தெரிய வந்தது. உடனே வங்கி மேலாளர் விழுப்புரம் தாலுகா காவல் நிலையம் சென்று முகேஷ் வங்கி பணத்தை அள்ளிச் சென்றது குறித்து புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் முகேஷ் தனது சகோதரிக்கு போன் செய்து, தன்னை சிலர் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து வருமாறு மிரட்டினார்கள். அவர்கள் மிரட்டலுக்கு பயந்து பணத்தை எடுத்துக் கொண்டு சென்றேன். இப்போது அவர்கள் பணத்துடன் என்னை கடத்திச் செல்கிறார்கள். உயிருடன் திரும்ப வருவேனோ மாட்டேனோ என்று பயமாக உள்ளது. எனக்கு சொந்தமான பணம் ஒன்றரை லட்சம் ரூபாயை உன்னுடைய கணக்குக்கு ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்துள்ளேன் என்று கூறிவிட்டு போனை துண்டித்துள்ளார் முகேஷ்.
இந்த தகவல் குறித்தும் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் கேஷியர் முகேஷை பணத்துடன் மர்ம நபர்கள் கடத்திச் செல்வதாக சமூக வலைதளங்களில் வேகமாக செய்தி பரவி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் முகேஷை தீவிரமாக தேடி வந்த நிலையில், அவரது செல்போன் இருக்கும் இடத்தை சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் கண்டறிந்தனர். அப்போது அவரது செல்போன் கடைசியாக சென்னை திருவான்மியூர் பகுதியில் சுவிட்ச் ஆஃப் ஆனது தெரிய வந்தது. போலீசார் பல்வேறு இடங்களிலும் கேஷியர் முகேஷை தீவிரமாகத் தேடினர். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் முகேஷ் விழுப்புரத்தில் உள்ள அவரது நண்பர் ஒருவரது வீட்டில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்தனர்.
போலீசாரிடம் பிடிபட்ட கேஷியர் முகேஷ் அளித்த வாக்குமூலத்தில், "எனக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மிகவும் விருப்பம். அதை விரும்பி விளையாடுவேன். இதற்காக என்னிடம் இருந்த பணம் மற்றும் நண்பர்களிடமும் நிறைய கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்துள்ளேன். மேலும் வங்கிக் கணக்கில் இருந்த 20 லட்ச ரூபாய் பணத்தையும் ரம்மி விளையாடி இழந்தேன். இழந்த பணத்தை எப்படியாவது மீண்டும் கைப்பற்றியே தீர்வது என்று மேலும் மேலும் ஆன்லைன் விளையாட்டு விளையாடி பணத்தை இழந்தேன். ரம்மி விளையாட்டில் என்னால் ஜெயிக்க முடியவில்லை. கடன் சுமை மிகவும் அதிகரித்தது. கடனை எப்படி அடைக்கப் போகிறேன் என்ற மன உளைச்சல் ஏற்பட்டது
இந்த நிலையில் தான் வழக்கம்போல் பணிக்கு சென்றேன். எனது அறையில் 44 லட்ச ரூபாய் பணம் கட்டுக் கட்டாக இருந்ததை கண்டு மனம் மாறியது. உடனே 44 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு மேலாளரிடம் உடல்நிலை சரியில்லை என்று கூறி அனுமதி கேட்டு மருத்துவமனைக்கு செல்வது போல் அங்கிருந்து எனது இருசக்கர வாகனத்தில் கூட்டேரிப்பட்டு வரை சென்று அங்கே எனது வாகனத்தை நிறுத்திவிட்டு பஸ் ஏறி சென்னை சென்றேன். சென்னையில் உள்ள திருவான்மியூர் கடற்கரை பகுதிக்கு சென்று அங்கிருந்தபடியே எனது சகோதரிக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை செலவிற்காக அனுப்பி வைத்தேன்.
அதன் பிறகு போலீஸாரிடம் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்று பல்வேறு யோசனைகள் செய்து கடலில் விழுந்து உயிரிழந்தது போல் நடிக்கலாம் என்று எண்ணினேன். என்னிடம் பணக்கட்டுகள் இருந்ததால் அந்த எண்ணத்தை கைவிட்டு இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு பெங்களூரு பக்கம் சென்று வாழலாம் என்று முடிவு செய்தேன். தற்போது கர்நாடகாவில் தேர்தல் நடைபெற இருப்பதால் பணத்துடன் செல்லும்போது வழியில் சோதனையில் மாட்டிக்கொண்டால் பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரும். எனவே, இந்த திட்டம் வேண்டாம் என்று முடிவு செய்து அடுத்து புதுச்சேரி பகுதிக்கு சென்று தலைமறைவாகி விடலாம் என்று முடிவெடுத்து அதன்படி இரவு நேரத்தில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும்போது போலீசிடம் சிக்கிக் கொண்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.
முகேஷ் வங்கியில் இருந்து எடுத்துச் சென்ற பணத்தில் 3000 ரூபாய் மட்டும் செலவு செய்துள்ளார். மீதி பணத்தை போலீசார் முகேஷிடம் இருந்து கைப்பற்றி உள்ளனர். வங்கியில் பணியாற்றும் கேஷியர் ஒருவரே 44 லட்சம் பணத்தை பட்டப்பகலில் சுருட்டிக் கொண்டு தலைமறைவாகி பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.