‘ஒரே ராத்திரில எங்க வாழ்க்கையே அழிஞ்சி போகுற மாதிரி ஆயிடுச்சு. இப்படி ஒரு பேய்மழைய இதுவரைக்கும் நாங்க பாத்ததே இல்ல’ எனக் கண்ணீர் வடிக்கும் கிராம மக்கள், மெழுகுவர்த்தி வாங்கக் கூட காசு இல்லாமல், வெளிச்சத்திற்காக விறகுகளைப் பற்ற வைக்கும் அவலம் மயிலாடுதுறையில் அரங்கேறியுள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழையானது பெய்த வண்ணம் இருக்கிறது. அதில், மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வரலாறு காணாத அளவில் பெய்து வருகிறது. மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சீர்காழி, கொள்ளிடம், செம்பனார்கோயில் ஆகிய முக்கிய இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது. இதனால், அப்பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளிலும், விவசாய நிலங்களிலும் மழைநீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேவரோடை, இரவுக்கொள்ளை உள்ளிட்ட கிராமங்களின் பிரதான சாலைகள் வெள்ளநீரால் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியே சென்று வர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்த நிலையில், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும் உத்தரவிட்டிருந்தனர். கனமழை காரணமாக கடந்த சனிக்கிழமையிலிருந்தே பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. இது குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி கூறும்போது, “மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் தண்ணீர் அளவு குறைந்தால் மட்டுமே மின்சாரம் வழங்க முடியும். 14ம் தேதி காலைக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் அளிக்கப்படும்.” என்று தெரிவித்திருந்தார்.
இதுவரை 21 கிராமங்களில் மழைநீர் முழுவதுமாக சூழ்ந்துள்ளது என அரசுக் கணக்கெடுப்பு கூறுகிறது. அந்தக் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டில் மின்சாரம் இல்லாததால் பல்வேறு துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். பலவிதமான விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் வருவதால் இரவு முழுவதும் தூங்காமல் பொதுமக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். மேலும், மெழுகுவர்த்தி வாங்க கூட வழி இல்லாமல் வீட்டின் வாசலில் காய்ந்த விறகு சுள்ளிகளை வைத்து நெருப்பு மூட்டி பொதுமக்கள் இரவுப் பொழுதைக் கழித்து வருகின்றனர். அது மட்டுமின்றி, பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் நிலத்தடி நீரையே குடிநீராகப் பயன்படுத்தும் அவல நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து, “நாங்க எத்தனையோ பெருமழையையும், புயலையும் பார்த்திருக்கோம். ஆனா, இப்படியொரு பேய்மழையை எங்க வயசுல பாத்ததில்ல. ஒரே ராத்திரில எங்க வாழ்க்கையே அழிஞ்சி போகுற மாதிரி ஆயிடுச்சு” என அந்தக் கிராமத்து மக்கள் கண்ணீர் மல்க பேசியுள்ளனர்.