வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குள் உள்ளது நெக்னாமலை கிராமம். அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 21 ஆண்டுகளாக சாலை வசதி கேட்டு போராடி வருகின்றனர். இது தொடர்பாக பலமுறை புகார் மனு அனுப்பியும் எந்த அரசும் கண்டுக்கொள்ளவில்லை, அதிகாரிகளும் பெரிதும் கண்டுக்கொள்வதில்லை.
இந்நிலையில் கடந்த சில இரு தினங்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக நோட்டீஸ் அச்சடித்து வெளியிட்டிருந்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ராமன் கவனத்துக்கு செல்ல, அக்கிராமத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வாக்களிக்க ஏற்பாடு செய்யுங்கள் என உத்தரவிட்டார். வாணியம்பாடி வட்டாட்சியர் முருகன், வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் முரளி தலைமையிலான காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினரும் நெக்னாமலை கிராம பொதுமக்களிடம் நேரில் சென்று, நெக்னாமலை கிராமத்திற்கு சாலை அமைப்பதற்காக ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து விளக்கமளித்ததோடு தேர்தல் முடிந்ததும் உள்ளாட்சி துறையின் மூலமாக அரசிற்கு செலுத்த வேண்டிய தொகை ரூ. 17,50,000 கட்டி நெக்னாமலை கிராமத்திற்கு செல்ல சாலை அமைக்க ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தனர்.
நாங்கள் மக்களுடன் கலந்து பேசிவிட்டு தகவல் கூறுகிறோம் எனச்சொல்லி அதிகாரிகளை அனுப்பிவைத்தனர். அதனை தொடர்ந்து நெக்னாமலை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஊர் கூட்டம் போட்டு பேசினர். அப்போது பலரும் பலவித கருத்துக்களை கூறியுள்ளனர். எந்த முடிவும் எடுக்காமல் கூட்டம் கலைந்துள்ளது. இந்நிலையில், அதிமுகவினர் சிலர், வட்டாட்சியரிடம் வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்ததோடு தேர்தலில் வாக்களிக்கப் போவதாக நோட்டீஸ் அடித்தும் வெளியிட்டனர்.
இது ஊருக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கிராமத்தின் சார்பில் எந்த முடிவும் எடுக்காத நிலையில், நீங்கள் எப்படி தன்னிச்சையாக தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டோம் என நோட்டீஸ் அச்சடித்து அதிகாரிகளிடம் உறுதி கூறலாம் எனக் கேட்டுள்ளனர். இதனால் அதிமுகவினருக்கும் எதிர்த்து கேள்வி கேட்டவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அது அடிதடியாகியுள்ளது. இதில் அதிமுகவை சேர்ந்த முனுசாமி மற்றும் அவரது தம்பி ஞானவேல் இருவருக்கும் அடிப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த இருவரையும் நெக்னாமலை மக்கள் உதவியுடன் டோலி கட்டி தூக்கி வந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த வாணியம்பாடி கிராமிய போலீசார் முனுசாமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சிவக்குமார் உள்ளிட்ட 10 பேரை தேடி வருகின்றனர்.
இந்த தகவலின் பேரில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல், அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் அதிமுகவை சேர்ந்த முனுசாமியை சந்த்தித்து ஆறுதல் கூறியதோடு, அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலரை நேரில் அழைத்து உடனடியாக உரிய சிகிச்சையினை அளிக்குமாறு அறிவுறுத்தினர்.