கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் உள்ள ஓட்டைப் பிள்ளையார் என்ற வரசித்தி விநாயகர் ஆலயத்தில், தமிழக அரசின் தடையை மீறி இந்து முன்னணியினர் பொது இடத்தில் மூன்றடி உயரம் கொண்ட விநாயகர் சிலையை வைத்தனர்.
பின்னர் அக்கோயிலின் அர்ச்சகர் வேத மந்திரங்கள் முழங்க விநாயகர் சிலைக்கு சிறப்புப் பிரார்த்தனை செய்தார். இதுபற்றி தகவல் அறிந்த மங்கலம்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இந்து முன்னணியினருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமலிருக்க சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். மேலும் பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல், தடையை மீறி இந்து முன்னணியினர் விநாயகர் சிலையை இருசக்கர வாகனதின் மூலம் எடுத்துச் சென்று, அருகில் உள்ள பெரிய ஏரி தண்ணீரில் கரைத்தனர்.
தடையை மீறி பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்ததற்காக இந்து முன்னணியினர் மீது மங்கலம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் கடந்த வருடம் இப்பகுதியிலிருந்து 77 விநாயகர் சிலைகள் ஊர்வலமாகச் சென்று கடலில் கரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.