Skip to main content

கஜா புயலடித்த பகுதியில் தண்ணீர் பஞ்சம்; அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் சொந்த செலவில் குடிநீர் நிலையம் அமைத்துக்கொண்ட பொது மக்கள்;

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

கஜா புயலால் பாதித்த பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் முற்றிலுமாக பாதித்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு கையறுநிலையில் இருக்கின்றனர் பொதுமக்கள். தண்ணீர் பஞ்சத்தை போக்க கிராம மக்கள் தங்களுக்குள் நிதி திரட்டி ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை அமைத்துள்ளனர்.

 

water plant

 

கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் முதலில் சிக்கியது நாகை மாவட்டம். அதிலும் குறிப்பாக வேதாரண்யம் தாலுக்கா. அங்கு  பல்லாயிரக்கணக்கான மரங்கள் விழுந்தும், முறிந்தும், லட்சக்கணக்கான வீடுகள் சேதமடைந்தும் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. அதோடு நின்றிடாமல் கடல் சேரும், கடல் நீரும்,  உட்புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால்  நிலத்தடி நீர் முற்றிலுமாக மாறி உப்பு நீராக மாறிவிட்டது. சுவையான குடிநீரை நிலத்தடியில் பெற்று அருந்திவந்த மக்கள் தற்போது குடிநீருக்காக பல கிலோமீட்டர் தூரம் செல்லும் அவல நிலையும் பல்வேறு கிராமங்களில் ஏற்பட்டுள்ளது. 
 

கோடை துவங்கியதும் தமிழகத்தில் பல கிராமங்கள் குடிநீருக்கு தள்ளாடிவருகிறது. அதேபோல் கஜா புயலால் பாதித்த பகுதிகளிலும் ஏற்பட்டுவிட்டது. அந்த வகையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிக்கொள்ள நாகை மாவட்டம் புதுப் பள்ளி  கிராம மக்கள் ஒன்று கூடி தங்களுக்குள் நிதி திரட்டி இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அப்பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து திறந்துள்ளனர். 
 

புதுப்பள்ளி சமுதாய கூடத்தில் அமைக்கப்பட்ட புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை பொதுமக்களே திறந்து வைத்தனர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை பராமரிப்பதற்கு கிராம மக்களை சுழற்சிமுறையில் குடும்பத்திற்கு ஒருவர் என நியமிக்கப்பட்டுள்ளனர்.
 

இது குறித்து புதுபள்ளி சாமிநாதன் கூறுகையில், "கடற்கரையை ஒட்டிய பகுதி புதுப்பள்ளி கிராமம். கஜா புயலில் பெருத்த சேதம் அடைந்தது புதுப்பள்ளியில்தான். கடல் நீரும் கடல் சேரும் எங்க கிராமத்துக்குள்ள புகுந்து சாகுபடி நிலத்தையும், குடிநீருக்கும் வேட்டு வைத்துவிட்டது. உள்ளூர் அமைச்சர் ஓ.எஸ். மணியனிடம் குடிநீர் தட்டுப்பாடு குறித்து பலமுறை நேரடியாகவும், புகாராகவும் கூறிவிட்டோம், கஜா புயலடித்தபோது நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் எங்களை வேண்டுமென்றே அவர் புறக்கணிக்கிறார். அதை நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் எங்களுக்குள் வசூல் செய்து இரண்டு லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் சமுதாய கூடத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை உருவாக்கியிருக்கிறோம். இதை பராமரிக்க வீட்டிற்கு ஒருவர் என்கிற சுழற்சி முறையில் ஏற்படுத்தி இருக்கிறோம்" என்றார் நெகிழ்ச்சியுடன்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்