திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே காட்டுக்கொல்லை, விண்ணமங்கலம் ஆகிய பகுதிகளில் சுமார் 5க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் இயங்கிவருகின்றன. இதில் ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு, கென்னடிகுப்பம் ரயில்வே கேட் வழியாக சுமார் 100க்கும் மேற்பட்ட டிராக்டர்கள், லாரிகள் தினமும் செல்கின்றன. இதனால் இந்த சாலைகள் மற்றும் சாலையோரம் உள்ள வீடுகள் சேதமடைந்துவருவதாகவும், இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்துவந்தனர்.
இந்நிலையில், ஆகஸ்ட் 25ஆம் தேதி அப்பகுதி மக்கள் சாலையை மறித்து, அவ்வழியாக ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த இருபதுக்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மற்றும் லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் தெரிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் வாகனங்களைப் பொதுமக்கள் விடுவித்தனர்.